பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தாகுலம் தீர செய்ய வேல் முருகா! மாயைப் படலம் கண்ணில் இல்லை. கண்ணில் பார்வையை மறைக்கும் படலம் படர்வது உண்டு. அதை மருத்துவர்கள் உரித்துவிடுவார்கள். அத்தகைய படலம் அன்று இது. கண்ணிலே பார்வை வேறுபடுவதற்குக் கருத்திலே உள்ள மயல்தான் காரணம். ஆதலின் கண்ணில் உள்ள படலத்துக்குக் கருத்துப் படலமே காரணம். கருத்திலே மயல் இல்லாமல் வாற்சல்யம் உள்ள தந்தை பார்க்கும் பார்வை வேறாக இருக்கிறதல்லவா? ஆதலின் கருத்திலே உள்ள மயல் திரையைத்தான் கிழிக்க வேண்டும். மங்கையர் பார்வையில் படுவதற்குக் காரணமாக இருப்பது கருத்திலே உள்ள மயல். பட்டு உருகி ஆகுலம் கொள் வதும் அந்தக் கருத்துத்தான். மயலாகிய விதையும் கவலையாகிய மரமும் சிந்தையில்தான் உள்ளன. அங்கே புகுந்து மயலையும் கவலையையும் களையும் கருவி ஒன்று இருந்தால்தான் இந்த வினையாட்டுப் போகும். முருகனுடைய திருக்கரத்தில் உள்ள வேல் அத்தகையது. அது புறக் கண்ணாற் கண்டாருக்குக் கதிரும் செம்மையும் உடைய வேலாகத் தோன்றும். அகக் கண்ணாற் காண்டாருக்குச் செய்ய ஞானமாகத் தோன்றும். சூரனோடு செய்த போரில் அசுரர் கூட்டத்தைக் குலைத்த வேல் அது. உள்ளமாகிய போர்க்களத்தில் நற்குணங்களாகிய தேவர்களுக்கும் தீய குணங்களாகிய அசுரர் களுக்குமிடையே நாள்தோறும் நிகழும் நுட்பமான போரில் தன்னை நாடுவானுக்குத் துணையாகப் புக்குத் தீய குணங்களைச் சாடும் வேல் அது. அஞ்ஞான இருட்டைப் போக்கி ஞான ஒளியை ஏற்றி வைக்கும் செஞ்சுடர் வேல் அது. சிந்தாகுலத்தைப் போக்குவதற்குத் தக்க படையாக இருப்பது வேல். இருள் அடர்ந்த கரிய அஞ்ஞானச் செறிவைச் செய்ய சுடர்வேல் போக்கி விடும். அதனைக் கரத்தில் ஏந்திய அழக னாகிய முருகன் அருள் இருந்தால் இந்த நிகழ்ச்சி உண்டாகும். அதனால், - சிந்தாகுலந்தனைத் தீர்த்தருள்வாய், செய்ய வேல் முருகா! என்றார் அருணை முனிவர். 321