பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 மறுபடியும் சறுக்கி விழும் நிலை வராமல் இருந்தால், அது மூவறிவுயிராகி நாலறிவுயிராகி ஐந்தறிவுயிராகிக் கடைசியில் ஆறறிவுயிராகிய மனிதப் பிறவியை எடுக்கும். அப்போதுதான் அது நீர்மட்டத்தை அடைந்ததாகும். கடலின் ஆயிரக்கணக்கான மைல் ஆழத்திலிருந்து மெல்ல மெல்ல அழுக்குக் குறைவதனால் மேல் ஏறி வந்து மேல் மட்டத்தை அடைவதற்கு எத்தனையோ பிறவிகள் எடுத்திருக்க வேண்டும். அவ்வளவையும் எடுத்து எடுத்து வளர்ந்து வந்தாலும் மனிதப் பிறவி கிடைத்ததேயன்றி இன்னும் லட்சியத்தை அடையவில்லை. பிறவியென்னும் கடலைத் தாண்டி முத்தி என்னும் கரையை அடைய வேண்டும். நீர்மட்டமும் கரையும் நீர்ப் பரப்பின் மேல் மிதப்பதனால் மனிதன் உயர்ந்தவன் என்று சொல்லலாம். மற்றப் பிறவிகளை நினைத்தால் அவன் உயர்ந்தவன்தான். ஆனால் அவன் அடைய வேண்டிய கரையை நினைத்தால் அவன் தாழ்ந்தவனாகவே தோற்றுகிறான். ஆழ் கடலின் அடித்தளத்திலே இருந்த உயிருக்கு நீர்மட்டம் எங்கே இருக்கிறது என்று தெரியாது; அதை அளந்தறியும் ஆற்றல் அதற்கு இல்லை. மனத்தாலும் கற்பனை செய்ய முடியாது. கீழ்மட்டத்துக்கும் மேல் மட்டத்துக்கும் எத்தனை தூரமோ அதைவிடப் பன்மடங்கு தூரம், இப்போது மனிதன் மேல் வந்து மிதக்கும் இடத்துக்கும் கரைக்கும் இடையே இருக்கிறது. ஆதலின், மேலே வந்துவிட்டோம்; இனிக் கரையை அடைந்து விடலாம் என்று எளிதாக நினைத்துவிட முடியாது. கரை எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. எப்படி இருக்கும் என்றும் தெரியவில்லை. எந்தத் திக்கிலே இருக்கிறதென்பதுகூடத் தெரியாத நிலையில் மனிதன் இருக்கிறான். நீர் மட்டத்தின்மேல் மிதப்பது தான் அவன் விருப்பம் என்றால் அவன் இதோடு திருப்தியுறலாம். ஆனால் அந்தத் திருப்தியும் நெடுநேரம் நில்லாது. கரையை நோக்கிச் செல்ல முயலாமல் சும்மா இருந்தால் அவன் மீண்டும் கீழே ஆழ வேண்டியதுதான்; மறுபடியும் விலங்காகப் பிறக்க வேண்டியதுதான். ஆதலால் கரை தெரிகிறதோ இல்லையோ, கரை உண்டென்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்ய வேண்டும். 12