பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புரட்சிகர ஜனநாயகப் பெரும் புலவன் பாரதி கம்பனைப் பற்றி மிகப் பெருமையாகப் பாடியுள்ளதைக் காண்கிறோம்.

செந்தமிழ் நாடு என்னும் தலைப்பில் பாரதி கல்வி சிறந்த தமிழ்நாடு” என்றும் அதில் புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு ' என்றும் களிப்புடன் பாடுகிறார். கம்பன் தமிழகத்தில் பிறந்ததே தமிழ் நாட்டிற்குப் பெருமை தரத்தக்கது என்று பாரதி பெருமிதம் கொள்கிறார். மேலும் தமிழ் என்னும் தலைப்பில் பாரதி ‘யாமறிந்த புலவரிலே, கம்பனைப் போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை, உண்மை வெறும் புகழ்ச்சியில்லை” என்று உறுதி மிக்க சொற்களில் வலியுறுத்திக் கூறும் வரிகளில் கம்பன் முதலிடம் பெற்றிருப்பதைக் காண்கிறோம்.

இன்னும் “சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும் திருக்குறளுறுதியும், தெளிவும், பொருளின் ஆழமும் விரிவும் அழகும் கருதியும், எல்லையொன்றின்மை” என்னும் பொருளதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும் முன்பு நான் தமிழ்ச் சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று உறுதி கொண்டிருந்தேன்” என்று பாரதி உணர்ச்சி பொங்கக் கூறியுள்ளதையும் காண்கிறோம்.

மேலும் "உயர் கம்பநாடனுடன் கவிதை போயிற்று”என்றும் 'கம்பன் என்றொருமானிடன் வாழ்ந்ததும் என்றும், “கம்பனிசைத்த கவியெலாம் நான்” என்றெல்லாம் பாரதி குறிப்பிடும் போது கம்பனின் பெருமைகளையும் அவனது பல பரிமாணங்களையும் காண்கிறோம்.

பாரதிக்கு முன்னும் பின்னும் கம்பனைப் போற்றியும் புகழ்ந்தும் பலரும் எண்ணற்ற வரிகளில் எடுத்துக் கூறியுள்ளார்கள்.

இத்தனை சிறப்பும் கம்பனுக்கு அவன் தமிழில் இயற்றிய இராம காதை காரணமாக ஏற்பட்டது. இராமாயணக் கதையை நமது நாட்டில் பலரும் பல மொழிகளிலும் பாடியுள்ளார்கள். பாரத நாட்டில் தோன்றிய இந்த இராமாயணக்கதை வேறு பல நாடுகளுக்கும் கூட குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் சென்று அங்கும் இக் கதை பரவியுள்ளது என்பதை அறிவோம். இன்று இராமாயணக்கதை உலகில் அநேகமாக எல்லா நாடுகளிலும் அறிந்த {{{pagenum}}}