பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் -ஒரு சமுதாயப் பார்வை -அ. சீனிவாசன் 43 இன்று நாம், வால்மீகி ராமாயணத்தையோ அல்லது கம்பராமாயணத்தையோ அல்லது இதர மொழிகளிலுள்ள இராமாயணக் காவியங்களையோ நமது நாட்டில் தோன்றிய மகத்தான தெய்வீக நூல்களாக பேரிலக்கியங்களாக, நமது நாட்டு மக்களின் உயர்ந்த நாகரிக வளர்ச்சியின் அடையாளங்களாகக் காண்கிறோம். அந்தப் பேரிலக்கியங்களில் நமது பாரத சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்குகளையும் வரலாற்றுச் சாயல்களையும் சான்றுகளையும் பண்பாட்டு வளர்ச்சி நிலைகளையும் காண்கிறோம். கம்பனைப் பற்றி அவர் பெயரில் இன்றுள்ள இராமாயணப் பெருங்காவியத்தை ஆதாரமாகக் கொண்டு நமது சமுதாயக் கண்ணோட்டத்தில் சில கருத்துக்களை இந்த நூலின் மூலம் முன் வைக்க முயற்சிக்கப் பட்டிருக்கிறது. இன்று நாம் கம்ப ராமாயணத்தைப் படிப்பதும் விளக்குவதும் என்பது மட்டும் நமது வேலையல்ல. அது போதாது. கம்பன் தனது இராமாயண மகா காவியத்தில் முன் வைத்துள்ள தத்துவங்களையும் சீரிய சமுதாயக் கருத்துக்களையும் இன்றைய காலத்திற்கேற்ற படி சமுதாய முன்னேற்றத்திற்காக முன்னெடுத்துச் செல்ல வேண்டியது நமது முக்கிய கடமையாகும். இத்தகைய நோக்கமே நமது பேரிலக்கியங்களின் குறிக்கோளாகும். பாரதி “கல்வி சிறந்த தமிழ் நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்று கூறும் போது அதன் தொடர்ச்சியாக “நல்ல பலவிதமாயின சாத்திரத்தின் மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு” என்று குறிப்பிடுகிறார் எனவே கம்பராமாயணத்தின் உயர்ந்த சாத்திர மணத்தைப் பாரெங்கும் பரப்பச் செய்ய வேண்டும். இக்கடமையை நாம் நிறைவேற்ற வேண்டும். “யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல், இளங்கோவைப் போல பூமிதனில் யாங்கணும் பிறந்ததில்லை உண்மை வெறும் புகழ்ச்சியில்லை” என்று பாரதி கூறும்போது அதன் தொடர்ச்சியாக,