பக்கம்:கவிஞர் கதை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

கவிஞர் கதை



ளிடையே உள்ள நட்பு உத்தம நட்பானால் அவர் நிச்சயமாக வருவார்”என்று சொன்னான். சோழன், உடம்பு சரி இல்லாமல் இருக்கிறான் என்ற செய்தி பிசிராந்தையாருக்குத் தெரியாது. ஆனாலும் அவர் மனசில் ஏதோ ஒன்று, அவரை உந்தியது. உண்மையான அன்பு இருந்தால் இப்படி நேரும். சோழனைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை மிகுதியாயிற்று. அவர் புறப்பட்டு விட்டார்.

பிசிராந்தையார் உறையூர் வந்து சேர்ந்தார். மாளிகையை விட்டுத் தவச்சாலையில் உயிர் விடுந் தறுவாயில் இருந்த கோப்பெருஞ் சோழனைக் கண்டார். அவர் வரவைக் கண்ட எல்லாரும் வியப்பில் ஆழ்ந்தனர். “என்ன ஆச்சரியமான நட்பு ஒருவரை ஒருவர் பார்த்ததே இல்லை. அரசன் அவர் வருவார் என்று சொன்னான். அவருக்குச் செய்தி சொல்லுவார் யாரும் இல்லை. அப்படியிருந்தும் இவன் சொன்னதுபோலவே கவிஞர் வந்துவிட்டாரே! இரண்டு பேருடைய மனசும் அப்படி ஒத்திருக்கின்றன!” என்று பேசிக்கொண்டார்கள். அன்புக்கு எத்தனை ஆற்றல் இருக்கிறதென்பதை எண்ணி வியந்தார்கள்.

பிசிராந்தையாரைப்பற்றி அவர்கள் பல காலமாகக் கேள்விப்பட்டிருந்தார்கள். அவர் தலை நரைத்த கிழவராக இருப்பார் என்று எண்ணியிருந்தார்கள். ஆனால் அக்கவிஞர் தலையில் ஒரு நரைமயிர் இல்லை. அதுவேறு அவர்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது. “புலவர் பெருமானே! உங்களைப்பற்றிப் பல வருஷங்களாக நாங்கள் கேள்விப்படுகிறோம், உங்களுக்கு நிரம்ப வயசாகி இருக்கவேண்டுமே ஆனாலும் தலை நரைக்கவில்லையே! என்ன மருந்து சாப்பிட்டீர்கள்?” என்று கேட்டார்கள். அவர் என்ன சொன்னர் தெரியுமா?

“எப்படி நரைக்காமல் இருக்கிறதென்றா கேட்கிறீர்கள்? எனக்குக் கவலையே இல்லை. என் மனைவி எனக்கு வேண்டியதைச் செய்யும் குணம் படைத்தவள். என் மக்கள் அறிவும் அடக்கமும் உடையவர்கள். என் வேலைக்காரர்கள் என் குறிப்பறிந்து வேலை செய்வார்கள். அரசன் செங்கோலாட்சி செய்கிறான். நான் வாழும் ஊரில் நல்லவர்கள் பலர் இருக்கிறார்கள். அதனால் நான் கவலையில்லாமல் வாழ்கிறேன். நரைக்காமல் இருப்பதற்கு இதுதான் காரணம்” என்றார்.

நெடுநாளாகக் காணாமல் மனத்தால் ஒன்றுபட்ட நண்பர்கள் கூடினார்கள். சோழன் அவரிடம் கடைசி விடையைப் பெற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/10&oldid=1525688" இலிருந்து மீள்விக்கப்பட்டது