பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


என்றும், தாமாகச் சம்பாதித்த பொருளைக் கொண்டு வாழாதவர் இரந்துண்டு வாழ்வாரினும் இழிந்தவர் ஆவர் என்றும் தாம் கருதிய கருத்துக்களை,

"உள்ளது சிதைப்போர் உளர்எனப் படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு"

என்ற அடிகளில் எத்துணை அழகுறக் கூறியுள்ளார் பாருங்கள் !

நற்றிணையில் இவர் கருத்தாக உள்ளனவற்றைக் காண்போமாக : ஒருவன் தன் மனத்துக்கு உகந்த மணாட்டியைப் பெற்றது தான் வழிபடும் தெய்வத்தைக் கண்ணெதிர் வரப்பெற்றது போலும் என்ற கருத்தினை,

"அழிவில முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கண்கண் டாங்கு"

என்னும் அடிகளில் கூறி நம்மைக் களிக்கச் செய்கின்றார் புலவர். அகநானூற்றில் காணப்படும் பாடல்களால் இப்புலவர் பெருமானின் அருங்கருத்துக்கள் பல புலனுகின்றன. செல்வத்தின் சிறப்பினைப் புலப்படுத்த வேண்டிப் "பாவத்தில் படாத வாழ்க்கையினைப் பெறுதற்கும், பிறர் வாயில்படி சென்று பிச்சை எடுத்து வாழாமல் வாழும் வாழ்க்கையினைப் பெறுதற்கும் செல்வமே காரணம்” என்பதை,

"அறன்கடைப் படாஅ வாழ்க்கையும் என்றும்
பிறன்கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும் பொருளின் ஆகும்"

என்னும் அடிகளில் கூறி விளக்கியுள்ளார்.