பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


வாழ்க்கையின் வசை எழு பிறப்பும் நீங்காது" என்பர் கந்தபுராண ஆசிரியர். " மானம் அழியாது உயிர் விடுகை சிறந்தது" என்னும் நல்வழி. "மானம் அழிந்த பின் வாழாமை முன்னினிதே" என்னும் இனியவை நாற்பது. "தம் மானம் போகும் வகையில் வானகமே வந்தாலும் சிறந்த மானிகள் அதனை விரும்பமாட்டார்" என்னும் நாலடியார். "மானம் அழிந்து வாழ்வதினும் மரணம் அடைவது உத்தமம்" என்னும் சாதாரணப் பழமொழியும் உலகில் வழங்கி வருகிறது. இத்தகைய மானத்தின் பெருமையினை நிலை நாட்டித் தம் உயிரையும் விட்ட மன்னரே, சேரமான் கணைக்கால் இரும்பொறையாவார். இவர் மன்னரானலும் மதி மிக்க புலவராயும் இருந்த காரணத்தால் கவியும் பாடிய காவலர் ஆவார்.

சேரமான் கணைக்கால் இரும்பொறை என்பார், இயற் பெயரை நாம் அறிதற்கு இல்லை. இவரது கால் திரண்டு வீரக்கழல் புனைதற்கு ஏற்ற பொலிவுடன் இருந்த காரணம் பற்றிக் கணக்கால் என்று சிறப்பிக்கப்பட்டு, இவரது சேரர் குடிக்கே சிறப்புப் பெயராக அமைந்த இரும்பொறை என்பதையும் இணைத்துக் கணக்கால் இரும்பொறை என்று கூறப்பட்டார் போலும் இவர் சேரர் மரபினர் என்பதைத் தெற்றத் தெளிய உணர்த்தச் சேரன் கணைக்கால் இரும்பொறை என்று அழைக்கப்பட்டனர்.