பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்


கற்றிடப் போக வேண்டும் என்று, தந்தையாரையும், தமையன்மார்களையும் வற்புறுத்திப் போராடினார்! அவர்களும் சிறுவன் என்று மறுத்துவிட்டார்கள். இருந்தாலும், போயே தீருவேன் என்ற பிடிவாதத்திலே ரவீந்திரர் வெற்றி பெற்று பள்ளி செல்லத் தொடங்கினார்.

எந்தப் பள்ளிக் கூட வாழ்க்கைக்காகப் போராடினாரோ அப்பள்ளி வாழ்க்கை அவருக்கு எட்டிக் காயாகக் கசந்தது. ஏனென்றால், பள்ளிக்குப் போய் வருவது, வீட்டில் அவர் தனிமையாக இருந்ததைவிட, மிகக் கொடுமையான சிறை வாழ்க்கையாக இருந்தது என்கிறார்.

ஆரம்பப் பள்ளிக் கல்வி வாழ்க்கை எப்படிப்பட்டது தெரியுமா? என்ற கேள்வியை எழுப்பிய ரவீந்திரர், அதை “அந்தமான் தீவு” என்று குறிப்பிட்டார். ஆரம்பப் பள்ளிகளில் சிறுவர்களைக் கல்வி என்ற பெயரால் கொடுமைப்படுத்துவதைத் தவிர, சிறுவர்களின் உள்ளம் கவர்ந்திழுக்கும் பகுதி ஒன்றும் இல்லை. அதனால், அவர் ஆரம்பக் கல்வி நடை முறைகளை அடியோடு வெறுத்தார்.

அக்காலம் வெள்ளையர் ஆட்சிக் காலம் அல்லவா? அதனால், ஆங்கில மோகம் அனைவரையும் ஆட்டிப்படைத்தது. பிற்கால வாழ்க்கைக்கு அரசுப் பணியைச் சுலபமாகப் பெறலாம் என்ற ஆசையினாலே நூற்றுக்கு எண்பது பேர் ஆங்கிலக்கல்வி ஆசையில் உழன்றார்கள். இதை ரவீந்திரர் எதிர்த்தார்.

அந்நிய நாகரிகமோகம், நடை உடை பாவனைகள், பேச்சு, எழுத்து, எல்லாம் அளவுக்கு மேலே தீராத ஒரு நோய் போல நடுத்தர, மேல்மட்ட மக்களைப் பற்றியிருந்தது.