பக்கம்:காலச்சக்கரம்-பொங்கல் பரிசு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3

வரவேற்கத் தகுந்தது என்று கருதி இம்மூவரும் திரு. வி. க. அவர்கள் வெளியிட்ட நவசக்தியில் பொங்கல் வாழ்த்து அனுப்பவேண்டுமென்று தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். பொங்கல் வாழ்த்து அனுப்பும் பழக்கம் வேகமாகப் பரவிற்று.

இப்போது பார்த்தால் எத்தனையோ வகையான வண்ணப் படங்களோடு பொங்கல் வாழ்த்துகள் வருகின்றன. பொங்கல் நம் உள்ளம் கவரும் விழா அல்லவா ?

என் நண்பர் கே. எஸ். பெரியசாமி 1930ஆம் ஆண்டில் விக்டோரியா மாணவர் விடுதியிலிருந்து பொங்கலுக்காக சொந்த ஊர் சென்றிருந்தார். எங்கள் ஊர்ப் பக்கங்களில் பண்ணையிலே மாட்டுப் பொங்கலே பெரிய திருநாள் ஆதலால் அவர் போகும்படியாயிற்று. அவரைப் பிரிந்திருந்த நான் அவருக்குப் பொங்கல் வாழ்த்தோடு வேறு ஒரு புதிய இலக்கியப் பரிசினையும் வழங்க விரும்பினேன்,

பொங்கல் வாழ்த்து என்ற தலைப்பிட்டு ஒரு சிறிய அழகான நோட்டுப் புத்தகத்தில் பக்கத்திற்கு ஒன்றாகப் பல கவிதைத் துணுக்குகளை எழுதி அவருடைய பெட்டியிலே மறைவாக வைத்து விட்டேன்.

அந்தப் பொங்கல் பரிசில் நானே சொந்தமாக எழுதியவைகளும், கவி ரவீந்திரநாத தாகூரின் பட்டிப் பறவைகள் (Siray Birds) என்ற நூலிலிருந்து மொழி பெயர்த்தவைகளுமாக சிறு சிறு கவிதைத் துணுக்குகள் அடங்கியிருந்தன. நானே எழுதிய நீண்ட கவிதைகளும் இடம் பெற்றன.

பல ஆண்டுகள் வரை அந்தப் பொங்கல் பரிசைக் காப்பாற்றி வைத்திருந்து பிறகு அவர் அதை என்னிடம் கொடுத்து நூலாக வெளியிடும்படிக் கூறிஞர்.