பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

345 கால்டுவெல்

முதலிய இடங்களிலுள்ள ஐரோப்பிய நண்பர்களைக் கண்டு வந்தான். அவர்களிடையே பெரிய மருது பெரும் மதிப்புக்குள்ளாயினான். யாரேனும் ஒருவர் கேளிக்கையை விரும்பினால் வெள்ளை மருதுவுக்கு ஒரு செய்தி அனுப்பினால் போதும். உடனே இணங்கி அதை நடத்தித் தருவான். அல்லது எவனொருவன் வீரவிளையாட்டில் பங்கெடுத்துக் கொள்கிறானோ அவனை வெள்ளை மருது விளையாட்டு அரங்கிற்கு அழைத்துச் சென்று அவனது வெற்றிக்கு உறுதிகூறி அவனைக் கூர் நோக்குடன் கண்காணிக்கவும் செய்வான். பெரும் புலி தோன்றுமாயின் திறனும் திண்மையுள்ள ஈட்டிவீரர்கள் அதைச் சூழ்ந்து கொள்ளும் சமயம் அவ்விலங்கை எதிர்த்து அடக்குவதற்கு வெள்ளைமருதுவே முதன்மையாக இருப்பான். ஆனால் சிறுவேட்டைகளைப் பெருந்தன்மையுடன் தட்டிக் கழித்து ஆங்கிலேயருக்காக விட்டுக் கொடுப்பான். (ஓ! - ந.ச.) அவர்களோ குறைந்த இடர்களுடன் பன்றி, கடம்பை (பெரியமான்), மான், பட்டாணிப் பறவை முதலியவற்றை அதிகமாக வேட்டையாடுவார்கள். (அப்படியா? - ந.ச.) 1795 ஆம் ஆண்டில் நான் மதுராவில் தங்கியிருந்தபோது இந்தக் கீழ்த்திசை நிம்ராடின் அதிக அன்பையும் ஆதரவையும் பெற்றேன். அப்போது அந்த இடத்தில் நான் புதிய படைத்தலைவனாக இருந்தேன். இதுவே அவனுடைய அக்கறையின்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

வளமை நிறைந்த பரந்த நாட்டை ஆளும் தலைவனாக இருந்தான் சின்ன மருது - அவனது உறைவிடம் சிறுவயல். கருமை நிறமுடையவனாயினும் அழகுடையவன்; நயமுடையவன்; அன்பும் பண்பும் நிறைந்தவன். அணுகுவதற்கு மிக எளியன். அவனது ஒரு சிறு அசைவையே சட்டமாக மதிக்கும் மக்களை ஆட்சி செய்து வந்த போதிலும் அவன் எவ்விதப் பாதுகாவலுமின்றித் திறந்த வெளியிலேயே வாழ்ந்து வந்தான். 1795 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நான் அவனைச் சந்தித்த போது, உள்ளே வர விரும்பிய ஒவ்வொருவருக்கும் தன் விருப்பமான வரவேற்பும் வழியனுப்பும் இருந்தன. அவ்வாறு வந்து சென்ற ஒவ்வொருவரும் மக்களின் தந்தையான அவனுக்கு எல்லாம் வல்ல இறைவனின் அருள் இருக்கும்படி வேண்டிக் கொண்டனர். அவன் நாட்டின் வழியே மிகச் சாதாரணமாகச் சென்றபோது அவன் எனது நண்பனானான். மதுரையில் நான் தொடர்ந்து தங்கியிருந்த போது அருமையான அரிசி, பழங்கள் முக்கியமாக இந்தியாவின் வேறு எப்பகுதியிலும் நான் கண்டறியாத சுவை மிகுந்த தோல் தடித்த ஆரஞ்சுப் பழங்களையும் அனுப்பி வைக்கத் தவறமாட்டான். ஈட்டி எறியவும், வளைதடி சுழற்றவும் அவனே முதன்முதலில் எனக்குக் கற்றுக் கொடுத்தான். அக்கருவியைத் திறமையாகப் பயன்படுத்துபவர்களால் ஒரு நூறு