பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 199


இந்தியா படைப்பலத்தை வளர்த்துப் பாதுகாத்துக் கொள்வது அவசியமாகிறது; தவிர்க்க முடியாதது.

திருவள்ளுவர் படைமாட்சி யென்று தனி அதிகாரமே அமைத்து ஓதுகிறார்.

"கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை” (765)

என்ற குறளில் அஞ்சாத தன்மையுடைய படை வலிமையை வலியுறுத்துகிறார். படை, போர் முனையில் செருக்கு உடையதாக மேவி, எதிர்த்தாக்குதல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

"கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா தரும்" (774)

என்பது திருக்குறள் காட்டும் வீரத்தின் இலக்கணம். இத்தகைய வீரம் பழைய போர் முறையில் அமைந்திருந்தது. இன்றைய போர்முறையோ பெரும்பாலும் மறைவான போர்முறை. போர் முறையில் விஞ்ஞானம் நெறி பிறழ்வையும், முறை பிறழ்வையும் தந்திருப்பதை எண்ணி வருந்தத்தான் வேண்டியிருக்கிறது.

போரில் படைக்கு அடுத்த இடத்தை வகிப்பது அரனேயாம். அரண் தற்காப்புக்கும் பயன்படுகிறது; மேவிச் சென்று தாக்கவும் பயன்படுகிறது. பழங்கால அரண் அமைப்பில் திருக்குறள் காட்டும் அரண் மிகச் சிறப்புடையது. அளத்தற்கியலாத உயரமுடைய மதில்; அவ்வளவு உயரமுடைய மதில் சுவர்களைச் செப்பமுடன் அமைந்த அடிப்படையுடன் கட்டும் கட்டடக்கலை அறிவு அன்று இருந்தது. அதனைச் சுற்றி ஆழம் மிக்குடைய நீர்ப்பரப்பு: அதனைச் சுற்றிச் செறிந்த காடு; நடக்க இயலாத பொதிமணற் பரப்பு; மலை; காடு; அகழி; மதில் என முறைப்படுத்தி வள்ளுவம் கூறுகிறது. இடம் நோக்கி