பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆதலால், அனைத்து மாணவர்களுக்கும் வேற்றுமையின்றி, தரமான மதிய உணவு தரப்படவேண்டும். ஏழை என்ற பெயரில் ஒரு சிலருக்கு மதிய உணவு வழங்குவது ஏழ்மை உணர்ச்சியையும் தாழ்வுணர்ச்சியையும் அதிகப்படுத்தும். பள்ளியில் உள்ள அனைவருக்கும் கட்டாயம் மதிய உணவு வழங்கப்பெறவேண்டும். பொதுவாக, நாம் அரிசியை விரும்பிச் சாப்பிடுகிறோம் என்றாலும் அதுவே போதுமான வளர்ச்சியைத் தராது. ஆதலால் வெண்ணெய், ரொட்டி, பால், முட்டை ஆகியன வழங்குதல் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்குத் துணை செய்யும்.

கிராமப்புறங்களில் அறிவியல் ஆய்வுமையங்கள் தொடங்கி, உலகத்தின் புதிய வளர்ச்சி வேகத்தைக் கிராமப் புறத்தின் சூழ்நிலையைப் பாதிக்காத வண்ணம் கிராமத்தார் அறியத் துணை செய்தல் வேண்டும். இந்த முயற்சி கிராமத்து மக்களின் வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை உண்டு பண்ணும்; அறிவை விரிவடையச் செய்யும், பாவேந்தர் பாரதிதாசன், "அறிவை அகண்டமாக்கு" என்றார். இதற்குரிய வாய்ப்புகள் கிராமத்தில் எளிதாக அமைய வேண்டும். படித்தவர்கள், படித்த அறிவியல் மேதைகள் கிராமப்புறங்களுக்குச் சென்று அறிவியல் தொழில் நுட்பங்களை எடுத்துக் கூற வேண்டும். இருபத்தோராம் நூற்றாண்டுக் கிராமத்து மனிதன் பண்பாட்டில்-கலாச்சாரத்தில் பழைய மனிதனாகவும் வளர்ந்துவரும் அறிவியல் மாற்றத்தைத் தழுவிக் கொண்டமையால் புதிய மனிதனாகவும் விளங்க வேண்டும். இதனைக் குன்றக்குடி சுதேசி விஞ்ஞான இயக்கம், காரைக்குடி, மைய மின் வேதியியல் ஆய்வக விஞ்ஞானிகள் துணையுடன் செய்து வருகிறது. இந்த முயற்சி பரவலாக்கப்படவேண்டும்.

வேளாண்மை

கிராமப்புறத்தின் செல்வ ஆதாரம் வேளாண்மையை நம்பியிருக்கிறது. நாடு விடுதலை பெற்ற பிறகு வேளாண்மை