பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

111


சத்துள்ள உணவுக்கு உத்தரவாதம் செய்யவேண்டும். இன்றைய இந்தியக் கிராமங்களின் உற்பத்தியில், இந்த உற்பத்தி முறை இல்லை. ஆட்டு மந்தைபோல், மற்றவர்கள் பயிர் செய்வதையே பயிர் செய்கின்றனர். அதுமட்டுமல்ல, இந்திய நாட்டுக் கிராமங்களில் பல இலட்சக் கணக்கான ஏக்கர் நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன. நமது கிராமப் பொருளாதாரம் மேம்பாடடையவும், தன்னிறைவு காணவும் மேதை குமரப்பா அவர்களின் கொள்கையை நடைமுறைப் படுத்துவதே நாட்டுக்கு நல்லது.

கிராம வளர்ச்சியில் அடுத்த இடம் பெறுவது கால்நடை வளர்ப்பு. விவசாயத்தின் இணைத்தொழில் இது. கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனமும் விவசாயிகள் உற்பத்தி செய்து தரவேண்டும். கால்நடைகள் விவசாயிகளுக்குப் பால் வழங்குவதோடு எரு மூலம் உரம் தந்து நிலத்திற்கு, மேம்பாட்டினையும் வழங்குகின்றன. கால்நடை வளர்ப்பு ஒரு தொழில் என்ற கருத்து உருவாக வேண்டும்.

அடுத்து, கிராமத்தில் தச்சு, கொல்லு, மர அறுவை, தேனி வளர்ப்பு, மண்பாண்டம் செய்தல், பாத்திரங்கள் செய்தல், தோல் பதனிடுதல், தோல் அடிப்படையிலான பொருள்கள் செய்தல், உணவுப் பொருள்கள் பதப்படுத்தும் தொழில், எண்ணெய் ஆட்டுதல், சோப்பு தயாரித்தல், பழங்கள் பக்குவம் செய்யும் தொழில், நெசவு முதலிய தொழில்கள் தொடங்குவதற்குரிய மூலப்பொருள்களும் உள்ளன. இத் தொழில்களைச் செய்வதற்குரிய தொழிலாளி களும் உள்ளனர். இத்தகைய தொழில்களைத் திட்டமிட்டுத் தொடங்கினால் கிராமங்களிலேயே வேலை வாய்ப்புக்கள் உருவாகும். கிராம மக்கள்-இளைஞர்கள் கிராமங்களைவிட்டு நகரங்களுக்குப் புலம் பெயரவேண்டிய அவசியம் ஏற்படாது. கிராமங்கள் தன்னிறைவு பெறும்.