பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

125


வழியைத் திருவள்ளுவர் விளக்கும் முறை முற்றிலும் விஞ்ஞானப் பார்வையின்பாற்பட்டதாக உள்ளது. மிகவும் முற்போக்கான கருத்து. வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாதது என்பதை இரு பொருள்படப் பேசாமல் திட்டவட்டமாக ஒத்துக்கொள்ளுகின்றார். அந்தப் பொருள் பரம்பரை வழியாகக் கிடைத்திடுமாயின் அது உடைமையல்ல என்றும் கூறுகின்றார். பொருள் உடைமையைவிடப் பொருளைப் படைக்கின்ற ஆற்றலுடைமையை-ஊக்கமுடைமையையே உடைமை எனப் பாராட்டுகின்றார். இஃது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிகமிக வியக்கத்தக்க ஒரு கருத்து. இதனையே இன்றையப் பொருள் முதல் வாதம் சித்தாந்தமாக எடுத்துக்கொண்டிருக்கிறது; தனிமனிதன் காலம் என்ற களத்தில் நின்று, ஊக்கமுடையவனாகப் பொருள் செய்து குவிக்க வேண்டும். இதுவே சமநிலைச் சமுதாய அமைப்பிற்குத் தொடக்க நிலையாகும்.

அறிவுடைமை

முற்போக்குச் சமுதாயம் அமையக் காலமும் ஊக்கமும் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியமானது அறிவும். ஏன்? காலத்தையும் ஊக்கத்தையும்விட அறிவுடைமை மிகமிக இன்றியமையாதது. அறிவுடைமைதான் காலத்தையும் ஊக்கத்தையும் முறைப்படி பயன்படுத்தத் துணை செய்கிறது.

சோஷலிச சமுதாய அமைப்பை உருவாக்க வேண்டுமானால், மக்களிடத்தில் சரியான அறிவு பரவுதல் வேண்டும். சென்ற காலத்தில், தனிமனித வாழ்க்கையிலும் சரி, சமுதாய வாழ்க்கையிலும் சரி ஏற்பட்டுள்ள எண்ணற்ற தவறுகளுக்கு அடிப்படை அறியாமையேயாகும். மயக்கத்தின் பாற்பட்ட-முறை பிறழ உணர்ந்த அறிவினாலும் தவறுகள் நிகழ்வதுண்டு.

வாழ்க்கை ஆக்கத்தின்பாற்பட்டது. ஆக்கமும் அறிவினாலாயது. ஆனால், ‘ஆக்கம் அறிவினாலும் முயற்சி