பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொள்ள அவ்வழி வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளப் பன்மொழிப் பயிற்சி தேவை.

வீடு காற்றோட்டமுள்ளதாக வேண்டுமென்றால் நிறைய சாளரங்கள் தேவை, நிறையச் சாளரங்கள் உள்ள விட்டில் ஒளிக்கதிர்களும், மெல்லிய பூங்காற்றும் நலச் சூழ் நிலையை உருவாக்கும். அதுபோல் பலமொழி நூல்களைக் கற்றுணர்வோரின் வாழ்க்கை சிறப்புடையதாக அமையும்.

இன்று, பன்னாட்டு நூல்களை அவரவர் மொழியில் பயிலும் வாய்ப்புப் பெருகியுள்ளது. எண்ணற்ற மொழி பெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. இந்த பன்னாட்டுத் தொடர்பை உருவாக்கி வளர்ப்பதில் நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், நூல்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. அது போலவே இசையும் நாடகங்களும், திரைப்படங்களும், பிற கலைகளும் பன்னாட்டுத் தொடர்புச் சாதனங்களாக உள்ளன. பன்னாட்டுத் தொடர்பு வளர்வதால், உலகின் அனைத்து நாடுகளும் அறிவியலிலும், தொழில் துறையிலும் அவற்றினைச் சார்ந்த பொருளாதாரத் துறையிலும் வளர்ச்சி அடைகின்றன.

இத்தகைய பன்னாட்டுத் தொடர்பில் தமிழகம் வழி வழியாக வளர்ந்து வந்துள்ளது. பண்டைத் தமிழக அரசுகள் கடல் வாணிகத்தில் சிறந்து விளங்கின. தமிழகத்தின் முத்து, அகில், சந்தனம், மிளகு, புகையினும் மெல்லிய பூந்துகில் ஆடைகள் முதலியனவும் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. தமிழகம், இந்தோனேசியா, சீனா போன்ற ஆசிய நாடுகளுக்கும், ரோம் முதலிய ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி வாணிகம் செய்தது. அதுபோலவே தமிழகம் அயல்நாடுகளிலிருந்து தேவையான பொருட்களை இறக்குமதி செய்தது. தமிழகத்தில் தொண்டி, பூம்புகார், கொற்கை, முசிறி ஆகிய துறைமுகங்கள் வரலாற்றுச்