பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

நாட்டுயர்வு ஏற்படும். ஆதலால் கிராமத்தின் எல்லா முயற்சிகளையும் வேளாண்மை முதல் வாணிபம்வரை கூட்டுறவு முறையிலே செய்ய முயற்சிப்பது நல்லது. கூட்டுறவின்மூலமே சுரண்டுபவன் சுரண்டப்படுபவன் என்ற இரண்டு சாதிகளை ஒழிக்கமுடியும்" என்று எழுதுகிறார். அடிகளார் பேசுவதோடு நின்றாரில்லை, எழுதுவதோடு நின்றாரில்லை. குன்றக்குடியைக் கூட்டுறவு மயமாக்கினார் அடிகளார். கூட்டுறவு முறையில் சிறுதொழில்நிறுவனங்கள் பலவற்றைக் குன்றக்குடியில் நிறுவினார். குன்றக்குடி மட்டுமன்றி அதன் சுற்றுவட்டாரமும் இதனாற் பயன்பெற்றது. அடிகளார் மணிவிழாவின் தொடக்க நிகழ்ச்சி முக்கொடியேற்றம். அதென்ன முக்கொடி? 1.தேசியக் கொடி 2.அருள்நெறித் திருக்கூட்டக் கொடி 3. கூட்டுறவுக்கொடி தேசியக் கொடியோடு கூட்டுறவுக் கொடியும் ஏற்றிக் கொண்டாடப் பெற்ற மடாதிபதியின் மணிவிழா இது ஒன்றுதான். குன்றக்குடிக்கு அருகிலுள்ள காரைக்குடியில் மத்தியஅரசின் மின்வேதியியல் ஆய்வுநிறுவனம் ஒன்று உள்ளது. அந்நிறுவனத்தை அடிகளார் முழுக்க முழுக்கப் பயன்படுத்திக் கொண்டார். அடிகளாரை அந்நிறுவனம் முழுக்க முழுக்கப் பயன்படுத்திக் கொண்டது. அந்நிறுவனத்தின் அறிவியல் உதவியைக் கொண்டு சுதேசி அறிவியல் இயக்கம் (சுதேசி விஞ்ஞான இயக்கம் என்று ஒரு இயக்கத்தையே தோற்றுவித்தார் அடிகளார். அவ்வியக்கத்தைப் பல்கலைக்கழகங்களின் அரங்குவரை கொண்டுசென்றார்அடிகளார்.

அடிகளார் மடாதிபதியாகப் பட்டத்திற்கு வந்தபோது குன்றக்குடி கிராமம் இருந்த நிலை வேறு அடிகளாரின் கடைசிக் காலத்தில் குன்றக்குடிகிராமம் அடைந்த நிலை வேறு, குன்றக்குடி கிராமத்தைத் தன்னிறைவு கிராமமாக்கினார் அடிகளார். அகில இந்தியாவுக்கும் மாதிரி கிராமமாக்கினார் அடிகளார். அடிகளார் பட்டத்திற்கு வந்தபோது ஆதீனம், இருந்த நிலைவேறு. அடிகளாரின் இறுதிக்காலத்தில் இளவரசுப்பட்டத்திற்கு பொன்னம்பல அடிகளாரைத் தெரிந்தெடுத்து நியமித்தார். அடிகளார் பட்டத்திற்கு வந்தபோது தகரக் குவளை மடம் என்று கேலி செய்யும் அளவில் இருந்தது. கடன்சுமையோடு இருந்தது. கடன் சுமையை நீக்கித் தகரக்குவளை மடத்தைத் தன்னிறைவு மடமாக்கிவிட்டுச் சென்றார் அடிகளார். அடிகளார் மடத்தின் நிலையையும் உயர்த்தினார். ஊரின் நிலையையும் உயர்த்தினார்.