பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இருவேறுபட்ட நிலை கடவுள் படைப்பாக இருப்பின் அக்கடவுளைப் பண்பில்லாதவன் என்று திட்டுகிறார். அதே கேள்வியை ஒன்பதாம் நூற்றாண்டில் சுந்தரர்,


நிறையும் செல்வத் தெதிர் மலைகள்
      இரண்டில் நிகழ்மங் கலவியங்கள்
அறையும் ஒலி ஒன்றினில் ஒன்றில்
      அழுகை ஒலிவந் தெழுதலும் ஆங்(கு)
உறையும் மறையோர் களை "இரண்டும்
      உடனே நிகழ்வ தென்?"

(பெ.பு. வெள்ளானை - 5)

என்று கேட்கிறார். விதிப்பயன், வினைப்பயன் என்றெல்லாம் அமைதி கூற முயற்சி செய்யவில்லை! நம்பியாரூரர் வருந்து கின்றார்: சங்ககாலக் கவிஞன் கூட

“இன்னா தம்ம இவ் வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே!”

என்றுதான் பாடினான். அதாவது இந்த உலக இயற்கை இன்னாததுதான்! துன்பமானதுதான்! இந்தத் துன்பத்தை இன்பமாக மாற்றவேண்டும் என்றான். வரலாற்றுப் போக்கில் மாற்றும் முயற்சியும் இல்லை; மாற்றவும் இல்லை! ஆனால் சுந்தரர் முதலையுண்ட குழந்தையை மீட்டுத் தந்து மகிழ்ச்சியை உண்டாக்கினார். இந்த வரலாற்றினை நினைவு கூர்வது நல்லது. இன்பச் சூழலைப் படைக்க நினைவு துணை செய்யும் அல்லவா?

சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள். வீரர்கள் மட்டுமல்ல. பக்திமான்களும் கூட! காளையார் கோயில் இராஜகோபுரத்தைக் கட்டியவர்கள். குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனம் சங்கரலிங்க முனிவரை ஞானாசிரியராகக் கொண்டவர்கள். ஆங்கிலேயரிடம் தோற்றுப் போய்ச் சங்சுரப்பதிக் காட்டிலே சுற்றிக் கொண்டிருந்த காலம். தங்களுக்கு மரணம் வர இருப்பதை உணர்ந்தனர்.