பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

181


காட்டிலும் மேட்டிலும் சுற்றித் திரிந்த பொழுது கவலைப்படாதவர்கள் போர்முனையில் புண்கள் பலவற்றைச் சுமந்த போது வருந்தாதவர்கள் காளையார் கோவில் கோபுரம் இடிக்கப்படும் என்று கேட்டு அழவிடைப்பட்ட புழுவெனத் துடித்தார்கள். கோபுரத்தை இழந்த பிறகு வாழ அவர்கள் ஒருப்படவில்லை. அவர்களே வலிய ஆங்கிலேயரைச் சென்று அடைந்தார்கள். காளையார் கோவில் கோபுரம் காப்பாற்றப்படுவதற்காக, என்றால் மருதுபாண்டியர்கள் மன்னர்கள் மட்டுமல்லர், மாண்புடையவர்கள், வீரர்கள் மட்டுமல்ல, அருளாளர்கள். தலையைக் கொடுத்துத் தலையாய தேவன் கோவிலைக் காப்பாற்றிய மருதுபாண்டியரின் புகழ் ஒளி பெற்று நிற்பதாக!


33. [1]தமிழிசை வளர்ப்போம்

மானுட வாழ்க்கை அற்புதமானது; அதியற்புதமானது. வாழ்தலே ஒருகலை, நிறைநலவாழ்வுக்கு ஈடாகக் கூடியது இங்கும் இல்லை; புத்தேள் உலகத்திலும் இல்லை; வளமான ஆறுகளுக்கு, பல கிளையாறுகள் நீர்வளத்தை ஈர்த்து வந்து நிரப்புகின்றன. அதுபோலவேதான், மானுடத்தின் வளமான வாழ்வுக்கு, அறிவு வாயில்களாக, அமைந்து விளங்குவன பொறிகள் ஐந்து; புலன்கள் ஐந்து. பொறிகள் அறிவுக் கருவிகள். புலன்கள் முதிர் அறிவுக் கருவிகள். ஆன்மாவுக்கு ஒருகுறையும் இல்லை. ஆன்மா, ஈடு இணையிலாத இன்பப் பெருவாழ்வு வாழ, இறைவன் அமைத்துள்ள வைப்புகள் பலப்பல. ஆனால் அவற்றை ஆன்மா பயன்படுத்துவதில்லை; பயன்படுத்த ஆன்மாவுக்குத் தெரிவதில்லை. ஏன் அவற்றைப் பயன்படுத்தவேண்டும் என்ற முனைப்பும்கூட இல்லை. இஃது இரங்கத் தக்க நிலை! இன்று பலரிடம் ஆன்மாவின் இயக்கம் இல்லை! உடலியக்கமே இருக்கிறது.


  1. சிந்தனைச் சோலை

கு.XIII.13.