பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

207



தமிழினத்தினுடைய நாகரிமனைத்தும், சமயச்சார்பில் உரம் பெற்றவைகளே என்று நம்புகிறோம். தமிழகத்தினுடைய சமயச்சார்பு, பிற இனத்தின் வழிப்பட்டதல்ல; தமிழகத்தின் தூய தன் இனவழிப்பட்டது என்றே நாம் நம்புகிறோம். காலஞ்சென்ற மறைத்திரு மறைமலையடிகளார். அவர்களுடைய கருத்தும் இதுவே. நாம் காணும் சமயநெறி சமுதாயத் தொடர்புடைய நெறி; சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக-சமுதாயத்தின் நல்வாழ்வுக்காக-சமய நெறி வேண்டுவன செய்யக் கடமைப்பட்டிருக்கிறது.

“ஒவ்வொரு அரசியல் சிக்கலும் ஒரு சமுதாயச் சிக்கலாக மாறுகிறது. ஒவ்வொரு சமுதாயச் சிக்கலும் ஒரு சமயச் சிக்கலாக மாறுகிறது” என்ற ஆங்கில அறிஞனின் சிந்தனை, நம்மைப் பல காலம் சிந்திக்கத் தூண்டியதுண்டு. வாழும் மனித சமுதாயத்தின் சிக்கல்கள், தொல்லைகள், அனைத்தையும் பொறுப்பேற்று மாற்றி அமைக்கவேண்டிய பொறுப்பு சமயநெறிக்கு இருக்கிறது.

இடைக்காலத்தில், சமயநெறியும், அறநெறியைச் சார்ந்தவர்களும், சமுதாயத்தைப் புறக்கணிக்கத் தொடங்கி விட்டார்கள். அதன் விளைவாக, நாட்டில் எத்தனையோ விதமான விளைவுகள், இவைகளையெல்லாம் மாற்றி, ஒரு புதுமைச் சமுதாயம் காணவேண்டும் என்ற பெரு விருப்ப நோக்கு இருப்பதால், தலைவர் பெரியார் அவர்களுடைய சமுதாயத் தொடர்புடைய கருத்துக்களை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

உலகத் தலைவர் பெரியார்

ஈரோட்டிலே முதன் முதலில், நானும் பெரியாரும் சந்தித்தோம். அவரும் நானும் ஒரே மேடையில் பேசினோம். இருவரும் அவரவர் கொள்கையில் பற்றுக்கொண்டுள்ளோம்; ஒருமைப்பாடானவற்றை எடுத்துப் பேசுவதில் தவறென்ன?

பெரியார் உலகத் தலைவர் ஆவார். அவரது அனுபவ அறிவைப் பற்றிப் பாராட்டிப் பேசுவதில் மகிழ்வடைகிறேன்.