பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

231


பிழைபடக் கருதியதேயாம். ஏன்? எதனால்? என்று கேள்வி கேட்பது பாவம் என்று கருதியதால் ஆகும். ஆனால், உண்மையான மெஞ்ஞானம் விஞ்ஞானத்தால் வளம் பெறுகிறது; உரம் பெறுகிறது, வாழ்கிறது; வாழ்வும் அளிக்கிறது. அது போலவே உண்மையான விஞ்ஞானம் பரிபூரணத்தை நோக்கி, வளர்ந்து கொண்டே இருக்கிறது. அப்பரிபூரணத்துவத்தை விளக்கி நிறைவான வாழ்க்கை அளிப்பதிலேயே நாட்டம் செலுத்துகிறது. இதை மறந்த தமிழர்கள் தமிழில் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தியே, அறிவியற் கருத்துக்கள் அரும்பியிருந்தும் அத்துறையை முறையாகத் தொடர்ந்து வளர்த்துக் கொள்ளத் தவறி விட்டார்கள். தாவர இயலை (Botany) எடுத்துக் கொண்டால் இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னர் எழுந்த தொல்காப்பியம் செடி கொடிகளுக்கு உயிர் உண்டென உணர்த்தியது. அவ் வழியிலேயே வள்ளல் பாரியும், முல்லைக் கொடியின் துன்ப அனுபவத்தை உணர்ந்து நெடுந்தேரினை நிறுத்தினான். ஏன்? முள்ளிச்செடிக்கு வீடுபேறும் கொடுத்தது தமிழ் நாகரிகம். இங்ஙனமிருந்தும், தமிழில் பூரண தாவர தத்துவ நூல்கள் வளரவில்லை. நாம் வளர்க்கவுமில்லை. விண்ணிலே பறக்க முடியுமென்ற கருத்துத் தமிழர்களிடத்துப் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமேயே தோன்றிவிட்டது.

புறநானூற்றுக் காலத்தில் வாழ்ந்த புலவர் “வலவன் ஏவா வான ஊர்தி” என்று குறிப்பிடுகின்றார். இன்றைய விஞ்ஞானம் புறநானூற்றுத் தமிழன் கண்ட அளவிற்கு வளரவில்லை. ஏனெனில், இன்று ஆளோட்டும் விமானமே இருக்கிறது. ஒட்டுவாரின்றித் தானே பறக்கும் விமானமே "வலவன் ஏவா வான ஊர்தி". பின்னர் வந்த கம்பன், இராவணன் வானவீதி வழியே பூத்தேரில் சென்றதாகச் சொல்லுகிறார். திருத்தக்கத்தேவர், “மயிற் பொறி” என்ற பெயரால் ஒரு வான ஊர்தி பற்றி விளக்கிச் செல்கிறார்.

இக்கருத்துக்களை முன்னோர் வழிப்பெற்ற தமிழர்கள் அவற்றைப் பார்த்து ரசித்தனர். நடைமுறைக்குக் கொண்டு