பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எழுதவேண்டிய நிலைவரும். அப்பொழுது எப்படி இந்தியைத் தாய்மொழியாக இல்லாதவன் இந்தியைத் தாய்மொழியாக உடையவனோடு போட்டி போட முடியும்? அதிலும், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழக அரசு இந்தி மொழிக் கொள்கையில் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற மனப்போக்கிலேயே காலம் கடத்தி வந்திருக்கிறது.

இந்தியாவின் ஆட்சிமொழியாக முன் ஆங்கிலம் இருந்ததற்கும் இப்பொழுது இந்தி இருப்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. ஆங்கிலம் மாநில எல்லையளவிலும் ஆட்சி மொழியாக இருந்தது. அதனால் தமிழ் கெட முடிந்தது. அது மட்டுமல்ல - தமிழ் உரிய வண்ணம் வளரவுமில்லை. ஆனால் இன்றோ இந்தி இந்தியக் கூட்டாட்சியின் ஆட்சி மொழி மட்டுமேயாம். தமிழ் நாட்டளவில் தமிழுக்கே முதலிடம்; தமிழே ஆட்சிமொழி ஆதலால் இந்தியால் தமிழ் கெட்டுவிடும் அல்லது தமிழன் கெட்டுவிடுவான் என்று சொல்வதற்கில்லை. எனினும் பண்டு தமிழ் தானே வளர்ந்தது; இனி தமிழன் தற்காப்புணர்ச்சியுடன், தமிழைப் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தி வருகிறது என்ற கிலி வளர்ந்துள்ள அளவிற்கு தமிழ் வளர்கிறது என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு ஊட்டப் பெறவில்லை. தமிழை ஆட்சிமொழியாக்கும் முயற்சியிலும், பயிற்சிமொழியாக்கும் முயற்சியிலும் தக்க - தீவிர முயற்சிகளைக் காட்டியிருக்கு மானால் தமிழர்களிடத்தில் மொழிவழிச் சார்பான நம்பிக்கை பிறந்திருக்கும். மேலும் தமிழ்நாட்டு மக்களிடத்தெழுந்த இந்தி எதிர்ப்புணர்ச்சிக்கு அரசு சரியான அல்லது ஆக்க ரீதியான முடிவெடுக்காமல் இந்தி எதிர்ப்புணர்ச்சியை ஒத்துக் கொண்டது போலவே மெளனமாக இருந்துவிட்டது. ஆதலால், தமிழ்நாட்டில் இந்திப் பயிற்சி பரவவில்லை-வளரவில்லை. இப்பொழுது திடீரென்று இன்னும் 10 ஆண்டுகளுக்குள் இந்தியில் தயாராக வேண்டும் என்றால் அது எப்படிச் சாலும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.