பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அல்லாது, இந்தியே இந்தியாவின் ஒரே ஆட்சி மொழி என்ற முடிவை இந்திய அரசு விரும்பி வற்புறுத்துமானால் இந்தியக் கூட்டாட்சியின் ஒருமைப்பாட்டுக்கும் உறுதிக்கும் இடையூறில்லாத மாநிலக் கடியாட்சி தரப்பெற வேண்டும். இன்றிருப்பதைவிட அதிகமான உரிமைகளும் அதிகாரங்களும் மாநில ஆட்சிக்குத் தரப்பெறுதல் வேண்டும். தமிழர்கள் வாழ்கின்ற எல்லா அயல்நாடுகளுக்கும் மற்றும் விரும்புகின்ற பிற நாடுகளுக்கும் கலாசார ரீதியான தூதுவர்கள் அனுப்பவும் பெற்றுக்கொள்ளவும் உரிமை வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்கள் தமிழில் இயங்க வேண்டும். அதாவது வருமான வரித்துறை, அஞ்சல் துறை முதலியவற்றில் தமிழே வழங்கப்பெற வேண்டும்.

இந்திய அரசின் உத்தியோகங்கட்குரிய தேர்வுக்கு இந்தி மொழி அறிவு கேட்கப் பெற வேண்டுமேயொழிய அதற்குரிய அலுவலகத் தேர்வுகளைத் தமது தாய்மொழியிலும் எழுதும் உரிமை வழங்கப்பெற வேண்டும். மத்திய அரசின் உத்தியோகத்திற்கு நியாயமான அளவில், மொழிவழி தேசிய இனங்களுக்கு விகிதாசாரப்படி ஒதுக்கியாக வேண்டும். இப்படிப் பல்வேறு முன்னேற்பாடுகளுடனும், தெளிவான கருத்தோட்டத்துடனும் செய்யப்பட வேண்டிய ஒரு சட்டத்தை அவசரக் கோலத்தில் செய்தது நமக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல என்றே கருதுகிறோம். அதே காலத்தில் மக்களாட்சி நடைபெறுகிற பாரத நாட்டில் ஜனநாயக ரீதியாகவும், நியாய சட்ட வரம்புகளுக்குட்பட்ட கிளர்ச்சிகள் மூலமாகவும் நம்முடைய உரிமையைப் பெற முடியும். அதை மறந்துவிட்டு மொழிச் சிக்கலையும் நாட்டுப் பிரிவினையையும் ஒன்றாக இணைப்பது நாட்டுக்கு நல்லதல்ல.

ஆதலால் மொழிச் சிக்கலை நாட்டுப் பிரிவினைக் கோஷத்தோடு இணைக்கும் முயற்சியை நாம் அனுமதிப்பதற்கில்லை. அது நல்லதுமல்ல. தமிழக மக்கள் இவ்வகையில்