பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பெயரிட்டனர். விடுதலைக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியில் அம்மொழியைப் பேசுவோரின் ஆதிக்கம் இருந்ததால் இந்தி தேசீய மொழி என்ற தகுதியை அந்த இந்துஸ்தானி செயற்கையில் பெற்றது. இந்திய மொழிகளில் இந்தியும் ஒன்று. இந்தி ஒரு மொழியாக உருவம் கொடுக்கப் பெற்றதே கி.பி. 14ஆம் நூற்றாண்டில் "லல்லுஜிலால்” என்பவரால்தான். இவர் பிராகிருதச் சிதைவான மொழியிலிருந்தும் அராபிய மொழி, பாரசீக மொழி, உருது மொழி ஆகியவற்றின் கலப்பிலிருந்தும் சீர்த்திருத்தம் செய்து இந்தி மொழியை உருவாக்கினார்.

இற்றைக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இராமானந்தர் இராமன் மீது பாடிய பாடல்களே இந்தி இலக்கியத்தின் தொடக்கம். இந்தி, இன்றும் கூட ஒரு மொழியென்று கூறுவதற்குரிய தகுதி பெறவில்லை. இந்தியை ஒரு மொழி என்பது மாயையின் தோற்றம் இந்தி மொழியானது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேறுபட்ட ஒலி வடிவுகளோடு பேசப்படுகிறது. எல்லா இடத்திலும் இந்தி ஒரே ஒலி வடிவைப் பெற்றிருக்கவில்லை. இந்தியை மேல்நாட்டு இந்தி, கீழ்நாட்டு இந்தி, பிகாரி என்ற மூன்று பெரும் பிரிவுகளாக்கியுள்ளனர்.

ஒவ்வொரு பெரும் பிரிவும் பல்வேறு உட்பிரிவுகளாகவும் பிரிந்துள்ளன. மேல்நாட்டு இந்தி என்பது தாங்காரு, பிரஜ்பாஷா, கனோஜ், பந்தேலி, உருது என்று ஐந்து பிரிவுகளையுடையது. கீழ் நாட்டு இந்தி என்பது அவதி, பகேலி, சத்தீஸ்கரி என்ற மூன்று பிரிவுகளையுடையது. பிகாரி என்பது மைதிலி, போஜ்புரி, மககி என்ற மூன்று பிரிவுகளையுடையது. மேலும் இடுகுறி பெயர் பெறாத பலவகையான சிறு சிறு மொழிகள் 81, இந்தியின் கிளை மொழிகளாகவுள்ளன. இந்த இந்தி மொழிகளில் ஒருவர் பேசுவதை மற்றவர் புரிந்து கொள்ள முடியாது. அது மட்டுமன்று. இந்தி மொழியின் பிரிவுகளில் வினைச் சொற்கள் மாறுபடுகின்றன.