பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அப்படியே இடர்ப்பாடுகள் இருப்பினும் நாட்டுப்பற்றின் பேராலும், ஒருமைப்பாட்டின் பேராலும், அடிப்படை உரிமைகளின் பேராலும் நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அரசியல் சட்டம் திருத்தப் பெறவேண்டும்

வட மாநிலத் தலைவர்கள் அல்லது அமைச்சர்கள் இந்தி திணிக்கப்படமாட்டாது என்றே, அடிக்கடி சொல்லி வருகின்றனர். இந்த உறுதிமொழியில் என்ன பயன் இருக்கிறது? வட மாநிலத் தலைவர்கள் அல்லது அமைச்சர்கள் நமக்குத் தரவேண்டிய உறுதிமொழி "இந்தி மட்டும் பாரத நாட்டின் ஆட்சிமொழியன்று. பாரத நாட்டின் அனைத்து நாட்டு மொழிகளும் ஆட்சிமொழிகளாக இடம்பெற்று செயல்முறைக்குக் கொண்டுவர நடுவணரசு உடனடியான முயற்சிகளை மேற்கொள்ளும். இந்த நிலையை எய்திட இந்தி பேசாத மாநிலச் சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும் ஏற்று ஒப்புறுதி அளிக்கும் வரை ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக இருக்கும்" என்ற உறுதிமொழியைத்தான் தமிழ் நாடு எதிர்பார்க்கிறது.

இந்தி பேசாத மாநிலங்களும் எதிர்பார்க்கின்றன. இந்த உறுதிமொழியையும் உறுதிமொழியாக அளித்தால் மட்டும் போதாது. அரசியற்சட்டத்தின் அடிப்படை உரிமைப் பகுதியில் மொழிப் பிரிவில் இந்த உறுதிமொழி ஏற்றப் பெற வேண்டும்.

இன்று இந்தி எதிர்ப்பு உணர்வு கூர்மையடைந்திருக்கிறது. மும்மொழித் திட்டத்தை ஏற்றுக்கொண்டு இந்தியைக் கற்பித்து வருகின்ற தென்மாநிலங்களின் முதலமைச்சர்கள் இந்தி எதிர்ப்பு அணியில் சேர்ந்திருக்கின்றனர். இத்திருப்பத்தைத் தோற்றுவித்த அரசியல் சூழல்களையும் சூழல்களுக்குச் செயலுருவம் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி. இராமச்சந்தின் அவர்