பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

303


விட வெறுக்கத் தக்கவர்கள் உழைக்காது உண்பவர்கள். சமூகத்தின் எல்லா தீமைகளுக்கும் பிறப்பிடம் உழைக்காமல் இருப்பதுதான்! இன்று நமது நாடு அவாவி நிற்பது கடும் உழைப்பையே. கடமைகைள் செய்யும் வாயிலாகவே உரிமைகள் வந்தடையும் என்பது உயர்ந்த நீதி. இன்று சிலர் கேட்கலாம். "உழைப்பவர்கள் ஏழைகளாக இருக்கிறார்களே” என்று, ஆம்; உண்மைதான்! உழைப்பவர்களின் இந்த ஏழ்மை உழைக்காதவர்களாலே, உழைக்காமல் மற்றவர்கள் உழைப்பைச் சுரண்டி வாழ்வதனாலேதான் ஏற்படுகிறது; ஆதலால் “உழைப்புத் தேவை” என்கிற கொள்கை தவறில்லை.

உழைக்காமல் சுரண்டி ஏமாற்றிச் சிலர் வாழ்வதைச் சமுதாயப் பொது விதியாக்க இயலாதல்லவா? சுரண்டலை எதிர்த்துப் போராடலாம். ஆனால் உழைக்காமல் சுரண்டலை எதிர்ப்பதாக வாய்ப்பந்தல் போட்டுவிட்டு வாளா இருத்தல் சமுதாயத்திற்குப் பயன்தராது. ஆதலால் இன்று நமது நாட்டின் அனைத்து மட்டங்களிலும் உண்மையான உழைப்பு தேவைப்படுகிறது. எல்லா இடங்களிலும் உழைப்பது போன்ற ஒரு பொய்த் தோற்றம் காணப்பெறுகிறது. ஆனால் உழைப்பு இல்லை. நாட்டின் வளம் வளரவில்லை. ஆதலால் நாட்டை வளப்படுத்த உழைப்போம்! வஞ்சனையின்றி உழைப்போம்! உளமார உழைப்போம்; அறிவார்ந்த ஆள்வினை மேற்கொண்டு உழைப்போம்; உழைப்பின் பயனை வீணர்கள் கொண்டு போகாமல் உழைப்போர் உலகம் பெற்று மகிழச் செய்யப் புதுவிதிகள் செய்வோம்!

– ‘மக்கள் சிந்தனை’ 1–2–81
3. உழைப்பு – ஊதியம்

“உழைப்புக்கேற்ற ஊதியம்” என்ற கொள்கையே உயர்ந்த அறநெறி. பழங்காலத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியம் என்ற கொள்கை இல்லை. செல்வ வளமுடையோர்