பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பட்டவரிகளுக்கு என்று இடம் ஒதுக்கும் சிந்தனை பிறந்து வளர்ந்து, இந்திய அரசியல் சட்டத்தில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை இடம் பெற்றது. இந்தச் சாதி அமைப்பு முறையில் எல்லாரையும் ஒரே அமுக்கமாக அமுக்கிவிட்டால் தீண்டத்தக்கவராக ஆக்கிவிட்டால் வாழ்க்கைக்குரிய உடல் உழைப்பைத் தந்து மேட்டுக்குடியினரை வாழ்விப்பர் யார்? அதனால் புத்திசாலித்தனமாகவே காரியம் செய்தனர். ஒரு சில கோடிப் பேர் தீண்டத் தகாதவர்கள். மற்றும் பல கோடிப் பேர் தீண்டத் தகாதவர்கள் அல்லர். ஆயினும் உடலுழைப்புக்குரிய பிறப்பினர். வியாபாரத்திற்குரியவர். போருக்கு உரியவர் என்று ஒதுக்கப்பெற்று விழிப்பாகக் கல்விக் கூடங்களிலிருந்தும் முறையான அரசுப் பணிமனைகளிலிருந்தும் முறையாக ஒதுக்கி வைக்கப்பெற்றனர். இத்தகைய சமூகத்தினரும் கல்வி ஆட்சி உரிமைகளில் பின்தள்ளப்பட்டே கிடந்தனர். இத்தகைய சமுதாயம் முன்னேறத் துடித்த நிலையில் மிகவும் பிற்பட்டோர் என்ற அடிப்படையில் கல்வி நிலையங்களிலும் ஆட்சிப் பணி மனைகளிலும் இடம் ஒதுக்கும் செயல்முறை பிறந்தது. இந்த இட ஒதுக்கீட்டு முறையைப் பெற்றுத் தருவதில் முனைப்புடன் நின்று போராடிய பெருமை தலைவர் பெரியார் அவர்களுக்கு உண்டு. இந்த இட ஒதுக்கீட்டு முறையால் தாழ்த்தப்பட்டவர்களும் பின்தங்கியவர்களும் கல்லூரிகளுக்குள் நுழைந்தனர். கற்றனர். பட்டதாரிகள் ஆயினர். ஆட்சிப் பணிமனைகளில் அமர்ந்தனர். சமுதாயத்திலிருந்து அருவெறுக்கத்தக்க மேடுபள்ளங்கள் சற்றே சமன் ஆயின. ஆயினும் போதுமான அளவு முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டது என்று கருதுவதற்கில்லை. இந்த நிலையில் இட ஒதுக்கீட்டைக் கைவிடும்படி முற்படுத்தப்பட்டோர் என்ற அணி போராடத் தொடங்கி உள்ளது. இந்தப் போராட்டம் தமிழ்நாட்டிலும் குசராத்திலும் தோன்றி உள்ளது. இந்தப் போராட்டத்தில் நியாயங்கள் என்ன? கண்டறிவோம்.

–'மக்கள் சிந்தனை' 15–4–81