பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

களுக்கு ஏற்ப, பங்குத் தொகைகளும் மான்யமும் தந்து உதவ வேண்டும். நாட்டுடைமையாக்கப் பெற்ற வங்கிகள், இந்தச் சங்கத்திற்கு மத்திய, நெடிய கால விவசாயத் திட்டங்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் தந்து உதவவேண்டும். அதாவது ஆழ்துளைக் கிணறு வெட்டுதல், நீர் இறைவை இயந்திரங்கள் கொள்முதல் செய்தல், உழு கருவி இயந்திரங்கள் வாங்குதல் முதலிய விவசாயத் துறைப் பணி அனைத்திற்கும் இந்த விவசாய சேவைக் கூட்டுறவு சங்கம் அடிநிலையில் பொறுப்பேற்க வேண்டும். இந்தக் கூட்டுறவு சங்கம், விவசாயிகளால் நிர்வாகம் செய்யப் பெறுதல் வேண்டும். நிர்வாக அமைப்பில் மிகச் சிறு விவசாயிகள் 3, சிறு விவசாயிகள் 3, இதர விவசாயிகள் 1 என்ற விகிதத்தில் இயக்குநர்கள் அமைய வேண்டும். எண்ணிக்கை கூடுதலுமாகலாம். ஆனால் இந்த விகிதத்திலேயே கூடுதல் அமைய வேண்டும். செயலாளராக ஒருவரை - கூட்டுறவுப் பயிற்சியும் வேளாண்மைப் பயிற்சியும் உடைய ஒருவரை - அரசுப் பரிந்துரையின் அடிப் படையில் சேவைச் சங்கம் நியமித்துக் கொள்ளும் உரிமை வேண்டும். விவசாயத் தொழில் நுட்பம் அறிந்த சிலபல ஊழியர்களைச் சங்கம் அமர்த்திக்கொள்ள வேண்டும். சங்கம் வழங்கும் பயிர்க்கடனிலேயே சேவைக்குரிய கட்டணங்களையும் சேர்த்துப் பணக் கடன் தருவதுடன் பொருள்களுடன் சேவையையும் தந்து உதவ வேண்டும். இத்தகைய பல்வகை பணிப் பொறுப்புக்களையும் ஏற்றுச் செய்யக்கூடிய விவசாய சேவைக்கூட்டுறவு சங்கங்கள் அமைவது அவசர அவசியமான பணி.