பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

366

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முழுமையாக அடையவேண்டும் என்பதை அறியவும், உணரவும், உணர்வுவழி வாழவும், வாழ்விக்கவுமே இந்தக் கருத்தரங்கு!

மனித வளம் அளப்பரியது; ஆற்றல் மிக்கது; இயக்கத் தன்மையுடையது. பிற துறை வளங்கள் அனைத்தும் எல்லைக்குட்பட்டவை. மனித ஆற்றல் அளவிறந்தது; நாளும் வளரும் தன்மையது. மனித வளம் பலப்பல. அவற்றுள் சிலவற்றையாவது சிந்தித்துப் பயங்கொள்ளுதல் நல்லது. மனிதவளம் முறையாகப் பயன்பட, மானிடத்தின் அறிவுக் கருவிகளாகிய மனம், புத்தி, சித்தம்,துணிதல், மேற்செல்லுதல் (அகங்காரம்) ஆகியவற்றையும் செயற்கருவிகளாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றையும் நாம் நமது மேலாண்மைக்குக் கொண்டுவர வேண்டும். செயற்கருவிகளாகிய கண்களும் செவிகளும் வாயும் அறிவு ஆக்கத்திற்குரிய செயற்பாடுடையன.

இந்தச் செயற்கருவிகளையும் அறிவுக் கருவிகளையும் முறையாகப் பயன்படுத்த அறிவு தேவை. அறிவுடையார் எல்லாம் உடையார், கல்வி, கேள்வி, வாழ்தல் ஆகியன மூலம் அடையக்கூடியது அறிவு. மனித வளத்திற்கு முதலாக அமைந்தது சிந்தனை. சிந்தனை செய்தல் ஒப்பரிய செல்வம்! கற்றல் தொடர்நிலைப்பணி, அது அறிவு நூல்களையும் ஒதுதலாகும். கற்றார் வாய்க் கேட்டறிதல் கேள்வி! நம்முடைய சொந்த வாழ்க்கையை முறையாக வாழ்வதன் மூலம் அனுபவத்தால் அறிவது அறிவு. அறிவு வளரும் தன்மையது. ஒளியும் இருளும் போல அறிவும் அறியாமையும் போட்டி போடுவன! ஆதலால் விழிப்பாக இருந்து அறிவு பெறுதல் வேண்டும். ஒன்றைப் பிறிதொன்றாகத் தவறாகக் கருதுதலே அறியாமை! அறிவு வளர்ந்து வளர்ந்து முதிர்ச்சியடைந்து ஞானம் ஆகிறது! வாழ்க்கையின் பேறுகளில் சிறந்தது ஞானமே!