பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

368

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அளவுக்குமேல் இயங்குவதில்லை. ஆதலால் உடல் நலத்தினையும் மன நலத்தினையும் பாதுகாத்தல் வேண்டும்.

மனநலத்திற்குத் துணையாய் அமைவது புத்தி, புத்தி, பகுத்தறியும் தன்மையுடையது; நன்று தீது அறியும் தன்மையுடையது. புத்தியைச் சீருற வளர்த்துக் கொண்டால் வாழ்க்கையைப் பயனுடையதாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றால், வாழ்வு பெருவாழ்வாகும். சில சமயங்களில் புத்தியும் தவறு செய்யும். புத்தி, தனித் தன்மையுடன் அல்லது சித்தத்துடன் தொடர்பு கொண்டு இயங்கும்பொழுது சிறப்புற இயங்கும். ஆனால், பல சமயங்களில் ஆசைகள் காரணமாக, சார்புகள் காரணமாகப் புத்தி தவறு செய்வதும் உண்டு. ஆதலால் புத்தியை மட்டும் முழுதும் நம்பாமல் என்றும் எப்பொழுதும் தவறுசெய்யாமல் தவிர்க்கக்கூடிய சித்தத்தை – சிந்தனை செய்யும் அறிவுக் கருவியை முற்றாக வழிகாட்டுதலாகக் கொண்டால் உடல்நலம். மனநலம் ஆகியன சீராக அமையும். ஆனால் பெரும்பான்மையோர் சித்தம் என்ற ஒன்று இருப்பதாகவும் அறியவில்லை; அதனை உபயோகப்படுத்தவும் இல்லை என்பது வருந்தத்தக்க உண்மை. இந்தச் சித்தம் என்ற அறிவுக் கருவியின் செயற் பாட்டை “யோசித்துப் பாருங்கள்” என்று நமது முன்னோர்கள் சொன்னார்கள். இன்று யோசிப்பார் யார்? அப்படியே யோசித்தாலும் வேண்டுதல் வேண்டாமை கடந்து நின்று யோசிப்பவர் யார்? மனித வளத்திற்குரியனவற்றிற்கு அடிப்படை சிந்தனை. சிந்திப்போமாக! செயல்படுவோமாக!

அடுத்து, மனிதகுலத்தின் அடைவு, அறிவு அறிவு ஒரு கருவி: அறிவு மானுடத்தைத் துன்பத்தினின்று மீட்கும்; இன்பநெறியில் உய்த்துச் செலுத்தும் “அறிவு அற்றம் காக்கும் கருவி” என்றார் திருவள்ளுவர். அறிவறிந்த ஆள்வினையே வாழ்க்கையின் உயிர்ப்பு. காலத்தையும் உழைக்கும் சக்தியையும் அவ்வப்போதே பயன்படுத்த வேண்டும். அறிவறிந்த