பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

393



அறிவு என்பது வாழ்க்கைக்குரிய முதற் பொருள். ஆன்மா, பதப்படுத்தப் பெறாத கச்சாப் பொருள். ஆன்மாவைப் பக்குவப் படுத்தி வாழ்வாங்கு வாழச் செய்யும் அறிவு, வாழ்க்கையின் முதல் தேவை. சென்ற தலைமுறையினர் வாழ்ந்த வரலாற்றிலிருந்து அறிவு பெறலாம். நமது தலைமுறையிலேயே உடன் காலத்திலேயே வாழ்கிறார்களே. அவர்களுடைய வாழ்க்கையின் நடைமுறையிலிருந்து பட்டறிவு பெறலாம். நமது சுற்றுப்புறச் சூழ்நிலைகளை ஆய்வு செய்தும் அறிவு பெறலாம். அறிவு, வாழ்க்கையை இயக்கும் கருவி. அறிவு, வாழ்க்கையின் குறிக்கோளை - இலட்சியத்தைக் காட்டி அமைத்துக் கொடுக்கும் சாதனம். வாழ்க்கையை ஆக்க வழியில் பயனுடையதாக புகழ் பொருந்தியதாக அமைப்பதும் அறிவுதான்! இந்த அறிவு பெறாதார் பிறக்கலாம்; உண்டு வாழலாம்; மனைவாழ்வு நடத்தலாம். பிள்ளை குட்டிகள் பிறக்கலாம். ஆயினும் வாழ்க்கையாகாது.

வாழ்க்கையென்பது பயனும் புகழும் நிரம்பியதாக அமையவேண்டும். அறிவார்ந்த வாழ்க்கையின் முதற்படி உடம்பை வளர்த்தல்; உடம்பைப் பாதுகாத்தல். உடம்பை வளர்த்தல் என்றால் என்ன? உடம்பின் எடையைக் கூடுதலாக்குவதா? இல்லை, இல்லை! உடம்பின் செயற்பாட்டுத் திறன் நாளும் வளர்தல் வேண்டும். உடம்பு ஓர் அற்புதமான கருவி, வளரும் தன்மையுடைய கருவி. உடம்பின் செயலாற்றலுக்கும் அறிவுக்கும் எல்லையே இல்லை. அறிவும் உழைப்புத் திறனும் நாளும் செயற்பட, செயற்பட வளரும். "இருந்தபடியே இருத்தல்" யோகத்திற்குத் தான்; வாழ்தலுக்கல்ல. ஆனால், இன்று பலரின் பணித்திறனில் அறிவும் ஆளுமையும் ஆற்றலும் வளராமல் தேங்கிய நிலையிலேயே உள்ளார்கள். ஏன்? சிலர் பணி நிலைகளில் பிரிவினைகளை உருவாக்கிக் கொண்டு செய்யாமல் விட்டு விடுகிறார்கள். அந்தோ, பரிதாபம்! நமது மூளை, உடற்கருவிகள் இவற்றின் ஆற்றல் மின்னாற்றலை விடக் கூட சக்தி வாய்ந்தது. எப்போது பயன்படுத்தினோம். இன்றோ பலர்