பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

405


புறுகின்றனர். பழகுதல், அன்பினை வளர்த்துக் கொள்ளுதல், ஒத்துழைப்பும் உதவியும் வழங்கல் ஆகிய செயல்முறையால் புறப் பண்புகளை, குணநலன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். பழகும் பாங்கியலின் வெற்றி ஒப்புரவறிதலில் முழுமையுறும்.

எந்த ஒரு சூழ்நிலையிலும் உணர்ச்சிகளைக் கடக்க வேண்டும். புத்திசாலித் தனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். உணர்ச்சி வெறும் எழுச்சி. அது பயன்தராதது மட்டுமன்றி எதிர்விளைவுகளையும் தரும் அறிவார்ந்த சிந்தனையும் செயலுமே வாழ்க்கைக்கு ஆக்கம் தரும். சமுதாயம் அமைதியாக இயங்கவும் சிந்தனை வழிப்பட்ட செயல்கள் துணை செய்யும். தற்சார்பான உணர்வுகளால் மனிதன் மிக மிகத் தனிமைப்பட்டுவிடுவான். சமுதாயத்திற்கு அந்நியமாகி விடுவான். ஆதலால் சமுதாய அமைப்பு கால் கொள்ளவும் செழித்து வளரவும் பிறர் நலம் நாடும் பெருங் குணம் தேவை. சமுதாய அமைப்பு தோன்றவும் நிலை பெறவும் ஒழுங்குகள் வழிப்பட்ட அணுகுமுறைகளும் ஒழுக்க நெறி வழிபட்ட வாழ்வியலும் தேவை. உறவுகளை வளர்ப்பதில் ஒழுங்குகள் பெறும் பங்கு மிகுதி. காலந்தவறாமை. எல்லைக்கண் நின்று பழகுதல் வேண்டும். எந்தவகையாலும் மறந்தும்கூடத் தம்முடன் பழகுகிறவர்களுடைய காலம், நேரம், சொத்துக்கள் பாழ்படச் செய்தல் கூடாது. அது போலவே பழகுபவரின் தனிப்பட்ட வாழ்க்கையினை அறிந்துகொள்ள ஆசைப்படுதல் கூடாது. பழகுபவன் குற்றங் குறைகளைக் காணக்கூடாது. ஐயங்கொள்ளுதல் கூடாது. ஒரோ வழி தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி எண்ணக் கூடாது; பேசக் கூடாது. சொல்லக் கூடாது. ஆயினும் நல்ல சூழ்நிலை வாய்க்கும் பொழுது தாயிற் சிறந்த பரிவுள்ளத்துடனும் மருத்துவரின் சிறந்த அன்புடனும் மனங்கொள்ளும் வகையில் எடுத்துக்கூறித் திருத்தங்காண முயற்சி செய்ய வேண்டும்; இதில் மிகவும் மதி நுட்பம் தேவை.

கு.xiii.27.