பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

29


வறுமை வராது; பஞ்சம் வராது; தூய்மையான நாட்டுப் பற்றுடைய சமுதாயம் நாட்டுப்பற்றை எந்தப் பற்றையும்விட உயர்ந்ததாகக் கருதவேண்டும். நாட்டுப்பற்று மற்ற எல்லாப் பற்றுகளுக்கும் பொருள் தந்து வளர்க்கும்; வாழ்விற்கும் சிறந்த நாட்டுப்பற்று இறையன்புக்கு ஈடாகாதது மட்டுமல்ல; அதனிலும் உயர்ந்தது. ஏன்? நாட்டில் பாதுகாப்புக்கு வளர்ச்சிக்குச் செய்வனவெல்லாம் வாழும் மக்களுக்கே திரும்பி வருகின்றன. நாட்டு மக்களே பயன் பெறுகின்றனர். அதனால் இந்த நூற்றாண்டில் நமது நாட்டில் செழித்து வளர வேண்டியது நாட்டுப் பற்றேயாம்.

நாடு-பொதுச் சொல்; பொருள் பொதித்தசொல்; நாடு என்பதற்குத் திருக்குறள் இலக்கணம் வகுத்துக் காட்டுகிறது. நாட்டுப்பணி என்றால் பொதுப்பணிதான்! கடவுள் தொண்டுதான்! நாட்டின் வளத்தை-வனப்பை-இயற்கைச் செல்வங்களை வற்றாது வளம் பெருக்கி வாழ்வளித்து வாழ்வதே நாட்டுப்பற்று.

நமது நாடு அந்நியருக்கு அடிமைப்பட்டது ஏன்? நாட்டுப் பற்றில்லாமல் நாட்டை முறையாகப் பேணாததாலேயே நாடு அடிமைப்பட்டது. அடிமைத் துன்பம் தாங்காமல் அல்லற்பட்ட இந்திய மக்களில் சிந்திக்கும் இயல்புடையவர்கள் நாட்டுப்பற்றுக் கொண்டார்கள்! வீட்டை மறந்தார்கள்; தன்னலத்தைத் துறந்தார்கள்; நாட்டின் விடுதலைக்குப் போராடினார்கள்! சிறைப்பட்டார்கள்; சித்திரவதைக்கு ஆளானார்கள்! நாடு விடுதலை பெற்றது! நாம் பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்க மீண்டும் நாட்டுப்பற்றியக்கம் வளர்தல் வேண்டும் ! நாட்டுப் பற்றினைத் தளரவிடக்கூடாது. நாட்டுப்பற்றினை வேள்வியாகக் கருதி இயற்றுவோமாக!

“மக்கள் சிந்தனை” 15-12-80