பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

455



பெண்களை விளம்பரப் பொருளாகக் கருதும் போக்கை எதிர்த்து, சேவைச் சங்கங்கள் போராட வேண்டும். இன்றைய இதழ்களில், திரைப்படங்களில் பாலியல் மிகுதியாக இடம் பெற்று வருகின்றன. இவற்றைத் தவிர்க்க வேண்டும். பெண்களுக்கு எதிராக இயற்றப்பெறும் எல்லா விதக் கொடுமைகளையும் சேவைச் சங்கங்கள் எதிர்த்துப் போராட வேண்டும்.

பெண்கள் அரசியலில் ஈடுவடுவது வரவேற்கத்தக்கது. நாட்டில் சமநிலையில் வாழும் பெண்கள், இந்த நாட்டின் மக்களாட்சி முறையில் பங்கேற்காது போனால், அரசியல் முழுமை பெறாது. ஆனால், நமது நாட்டுப்பெண்கள் அரசியலில் ஈடுபட நம்முடைய நாட்டு அரசியலின் தரமும் வளர வேண்டும். பெண்களை இரண்டாம் நிலையினராகக் கருதி இடம் ஒதுக்கீடு செய்தல் கூடாது. பெண்களுக்கு என்று தனித் தொகுதிகள் ஒதுக்கலாம்; ஒதுக்க வேண்டும். பெண்கள் என்பதற்காக மட்டும் அரசியலில் இடம் பிடித்தல் கூடாது. அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் தேர்ந்த கல்வியும் ஞானமும் உடைய பெண்கள் இடம் பெற வேண்டும். சமுதாயத்தில் பெண்களுக்குச் சொத்துரிமையும் அரசியல் உரிமையும் இன்றியமையாதன. இவற்றை நமது பெண்கள் அடைய - அனுபவிக்க சேவைச் சங்கங்கள் முயல வேண்டும்.

60. [1]அன்புச் செல்விக்கு

(திருமண வாழ்த்து)

அன்புள்ள செல்வி!

நல்வாழ்த்துக்கள்!

உனக்குத் திருமணம் நடைபெறுகிறது. உன்னுடைய திருமண வாழ்க்கை புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமைந்திட


  1. செல்வி ச. முத்துலட்சுமி என்ற ஜெய திருமண நாள் 6.7.1994 வெளியீடு