பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

33


ஆயிரங்காலத்துப் பயிர்” என்பதும் பழமொழி. இன்றையத் தமிழகத்தின் கல்வித்துறை மறுமலர்சி எதிர்காலத் தமிழகத்தின் ஏற்றத்திற்கு ஏற்ற அறிகுறியாகும். ஊராட்சி மன்றங்கள் கல்வி நிலையப் பொறுப்பை மேற்கொண்டிருக்கின்றன. வளரும் பயிருக்கு வான்மழைபோல, வளரும் குழந்தைக்குக் கல்வி. மன்றத்தின் தலைவர்கள் உறுப்பினர்கள் கல்வித் துறையில் இன்னும் அதிக ஈடுபாடு கொள்ளவேண்டும். மேதைத் தன்மைக்குச் சாதியும், அதிர்ஷ்டமும் வேண்டும் என்பது பத்தாம் பசலிக் கொள்கை; இன்று நாம் முயன்றால் நம் கிராமத்தில் எண்ணற்ற மேதைகளை உருவாக்க முடியும். ஆதலால் ஊராட்சி மன்றங்கள் எல்லாருக்கும் கல்வி-எப்படி யாவது கல்வி-வையத்துள் வாழ்வாங்கு வாழக் கற்றுக் கொடுக்கும் கல்வியளிக்கும் பொறுப்பை மேற்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் மட்டும் கற்றால் போதாது. இன்று வாழும் “வளர்ந்தவர்”களுக்கும்கூடக் கருத்துப்புரட்சி தேவைப்படுகிறது. அடிமைக்கால உணர்வுகள், ஆதிக்க எண்ணங்கள், தன்னல நாட்டம் இவற்றிலிருந்து நம்மிற்பலர் இன்னும் விடுதலை பெறவில்லை. வளர்ந்துவரும் சமுதாயத்திற்கு ஏற்றவாறு இணைந்துவாழ நாம் அனைவருமே நம்மைத் தகுதிப்படுத்திக்கொள்ள, வேண்டியிருக்கிறது. ஆதலால் கிராமத்தில் வாழும் நெறி காட்ட "வள்ளுவம்", எத்துறை யிலும் எப்பொழுதும் எதிலும் "அஹிம்சை" என்னும் காந்திய தத்துவம் ஆகியவற்றைப்பற்றிக் கேட்க-சிந்திக்க வாய்ப்புக்களை உண்டாக்க வேண்டும்.

சுதந்தரத்திற்கு முன்னர் இந்த நாட்டில் வாழ்ந்த மக்களின் சராசரி வயது சற்றேறக்குறைய 26 தான். வேத மந்திரங்கள் முழங்க, ஜாதகம் கணித்துப் புரோகிதர்களால் "நூறாண்டு வாழ்க" என்று வாழ்த்தப் பெற்றவனும்கூட 26 வயதில்தான் செத்தான். ஆனால், அவன் கவலைப்படவில்லை. வழக்கம்போல் விதி முடிந்தது என்று நினைத்து