பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

505


சோம்பல் ஒருபுறமும், பாதுகாப்பின்மை உணர்வும், பதற்றமும் நிலவுகின்றன. எங்கும் எதிலும் சேதாரங்கள்! காலச் சேதாரம், அறிவுச் சேதாரம், உழைப்புச் சேதாரங்கள் மலிந்து விட்டன. இவைகளைப் புறத்தே தள்ளிப் புத்தாண்டில் புத்துயிர்ப்புப் பெறுவோமாக!

நம் நாடு, வெகு வேகமாக மேற்கத்திய நாடுகளின் நாகரிகத் திசைநோக்கிச் செல்கிறது. இது தவறல்ல. ஆயினும் அதற்குரியவாறு நம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டாமா? நமது நாட்டில் திறந்த வெளிச் சந்தை அறிமுகப்படுத்தப் பெற்றுள்ளது. அப்படியானால், உள்நாட்டுப் பொருள்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற சுதேச உணர்வு இனி, தேவைப்படாது; இருக்காது. எனவே, நாம் உற்பத்தி செய்யும் பொருள்கள் தரமானவையாக இருக்க வேண்டும்; விலையும் குறைவாக இருக்க வேண்டும். இந்த உணர்வு நம்மிடம் இல்லையாயின் நம்முடைய உற்பத்தி மிகவும் பாதிக்கும். நம்முடைய உழைப்பின் தரத்தை உயர்த்தி, தரமான பொருள்களை உற்பத்தி செய்து உலகச் சந்தைகளுக்கு அனுப்ப உறுதி கொள்வோமாக!

சாதி, வகுப்பு வாதங்களைத் தலைதூக்க விடாமல் தடுக்க, புத்தாண்டில் உறுதிகொள்வோமாக! நமது நாடு, பாரத நாடு ! நாம் அதன் மக்கள்! நாம் அனைவரும் ஒருகுலம்; ஓர் இனம்; ஒரு விலை; ஒரு நிறை என்ற உணர்வு, புத்தாண்டின் பரிசாகக் கிடைக்கட்டும்! நமது நாட்டினை வளர்ப்பதில் முதற்கவனம் செலுத்தப் பெறுதல் வேண்டும். நாட்டின் புதல்வர்களாகிய நாமோ, நமது நாட்டை வளர்க்காமலும் – வளர்க்காதது மட்டுமல்ல – சுரண்டியும் வருகின்றோம். எதிர் வரும் புத்தாண்டிலிருந்து நமக்குத் தொழில் அன்பு செய்தல், நாட்டுக்கு உழைத்தல் என்று உறுதிகொண்டு வாழ்வோமாக! புத்தாண்டில் புதிய வரலாறு படைக்க வேண்டும். பழைய வரலாற்றைப் புதுப்பித்து வரலாற்றின் பக்கங்களில் இடம் பெறக்கூடிய காரியங்களைப் புத்தாண்டில் செய்ய உறுதிகொள்வோமாக!