பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

508

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விடுவித்து இன்பம் பொங்கச் செய்யலாம். இம்மண்ணகத்தை விண்ணகமாக்கலாம் என்ற தத்துவத்தையும் இவ்விழா நமக்குப் போதிக்கிறது.

இவ்விழா பெளராணிக மரபுப்படி ஒரு தேவ அசுர யுத்தத்தை நினைவுபடுத்துகிறது. நமது பழைய புராணங்களில் வருகின்ற தேவ அசுர யுத்தங்கள் நன்மைக்கும் தீமைக்கும் ஏற்பட்ட போராட்டங்களேயாகும். இந்தப் போராட்டம் மனித உலகம் சிந்திக்கத் தொடங்கிய காலந்தொட்டுத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. தீமைகள் அசுர வடிவமாகவும், நன்மைகள் தெய்வ வடிவமாகவும் கருதப் பெறுகின்றன. தீமையை எதிர்த்துப் போராடி நன்மையைச் சாதிப்பது உயர்ந்த மனிதனின்கடமை. அந்த மனிதனுக்குத் துணை நிற்பது தெய்வத்தின் பொறுப்பு. இக்கருத்தினையே திருவள்ளுவரும் கூட,

“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்”
–குறள் 1023

என்று கூறுகின்றார்.

தெய்வம் தீமையை எதிர்த்துப் போராடுகிறது என்பதன் சின்னமாகவே தெய்வங்களின் கைகளில் கருவிகள் உள்ளன. அக்கருவிகளின் மனிதனை எதிர்த்துப் போராடுவதற்காகவோ மனிதனைப் பயப்படுத்துவதற்காகவோ அன்று. மருத்துவன் கையிலுள்ள கத்தியைப் போல, உழவன் கையிலுள்ள மண்வெட்டியைப் போல, உலகியலின் நன்மை கருதிய தெய்வத்தின் திருக்கரங்களில் கருவிகள் காணப்பெறுகின்றன. அந்த யுத்தங்களிலும் கூட தீமையை எதிர்ப்பதன்றி தீமை யுடையோரை எதிர்ப்பதில் இல்லை போராட்டம்.

“ஆழ்க தீயது எல்லாம்” என்பார் திருஞானசம்பந்தர். அதனாலன்றோ தேவ அசுர யுத்தங்களின் முடிவில் அசுரர்கள் தங்களின் தகாத செயலுக்கு வருத்தப்படுவதையும், அவர்கள் மன்னிக்கப் பெற்று அருள்பாலிக்கப் பெறுவதையும்