பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

512

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொள்வோமாக! அசுரத் தன்மை தலை எடுக்காத வண்ணம் தொடர்ந்து போராடுவோம். எல்லோரும் வாழ்க! வளமுடன் வாழ்க! இன்பத்துடன் வாழ்க! வையகம் வளர்க! வாழிய உலகம் !

ஞாலத்தைச் சூழ்ந்திருக்கும் இருள் அகலுக! எங்கும் ஒளி விளக்குகளை ஏற்றுவோம்! அறிவொளியை ஏற்றுவோம்! கற்போம்! கற்பிப்போம்! ஒளியும் அறிவும், புதுமையும் இனிமையும் நிறைந்த உலகத்தைப் படைக்க இத் தீபாவளித் திருநாளன்று உறுதி கொள்வோம்! சரி, காலம் நீட்டிக்கிறது தின்பண்டங்களின் வாசனை அழைக்கிறது! உண்பிப்போம்! உண்போம்! வாழ்க மங்கலத் தீபாவளி!

73. [1]போகித் திருநாள் சிந்தனைகள்

பாரதி, முதுமையடைந்த – வளர்ச்சிக்குத் தகுதியில்லாத – மாற்றத்தை விரும்பாத பாரதத்தைப் போ! போ! என்று விரட்டினான். அதே போழ்து ஒளி படைத்த இளைய பாரதத்தை வரவேற்றான்! பழைமை பயனற்றதுதானா? ஆம்! அதிலென்ன ஐயம்! பழைமை பழைமையாகவே அமைந்து விடில் யாதொரு பயனும் இல்லை. பழைமை நாளும் நாழிகையும் வளர்ந்து புதுமையாக வேண்டும். வளர்ச்சியும் மாற்றமும் உலகத்தின் நியதி. கடவுளேகூட, முன்னைப் பழம்பொருளாக இருக்கலாம். அந்தக் கடவுள் பின்னைப் புதுமைக்கும் புதுமையாக விளங்கி உலா வராவிடில் கடவுளைத் தொழுவார் யார்? விரும்புவார் யார்?

“முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே”

என்பது திருவாசகம்.


  1. மதுரை வானொலி 13.1.4