பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

514

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற திருமந்திர மொழி வெற்றி பெறட்டும்!

கடவுள் நம்பிக்கை வேறு; மதம் வேறு. இன்று கடவுள் நம்பிக்கையை மதங்கள் ஜீரணித்து விட்டன. மனித குலத்தை இணைக்கும் சங்கிலியாக மதம் தோன்றியது. இன்று மதம், இணைப்புச் சங்கிலியாக உருமாற்றம் பெற்றிருந்தால் பாபர் மசூதி இடிக்கப் பட்டிருக்குமா? மண்டைக்காடு கலவரம் தான் தோன்றியிருக்குமா? இன்று மதங்கள் மனிதனை மூடனாக்குகின்றன; வெறியனாக்குகின்றன. மதம் – மதத் தலைவர்கள் கற்றுத் தந்த மூடப் பழக்கங்கள், விதி நம்பிக்கை அத்தனையும் போய்த் தொலையட்டும். நல்லெண்ணமும் நம்பிக்கையுமுடைய புதிய தலைமுறை உருவாகட்டும்.

நாட்டை வளர்ப்பது மக்கள் கடமை. இன்று நாட்டுப் பணி என்ற கடமையைச் செய்வார் அருகிப் போயினர். நாட்டுக்கு மக்களே சொத்து. மக்களுக்கு நாடு சொத்து அல்ல. இன்று மக்கள் நாட்டையே சொத்தாக நினைத்துச் சுரண்டி வாழ்கின்றனர். இத்தகைய பொருந்தா வாழ்க்கை போயகல வேண்டும். நாளும் நாட்டிற்கு உழைத்தல் யோகம் என்ற பாரதியின் கொள்கை வெல்க!

இந்தச் சிந்தனைப் போக்கில் தான் நமது முன்னோர்கள் போகிப் பண்டிகை என்ற சடங்கை, தைத்திங்கள் பிறப்புக்கு முதல் நாளில் அமைத்துள்ளனர். வீடுகளில் பயன்படாதன கழிக்கப்படுகின்றன. வீடுகள் புதுமையும் பொலிவும் பெறுகின்றன!

நாமும் சிந்தனை, செயலால் வளர்வோம்! வாழ்வோம்! போக வேண்டியன எல்லாம் போய்த் தொலையட்டும். வரவேண்டியன வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்வோமாக!