பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

546

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இறைவன் எழுந்தருள்வான் என்பதுதான்! எம்பெருமான் சிவன், ஓங்கி உயர்த்திப் பிடித்திருக்கும் கொடியும் எருதுக் கொடிதான்! எருதுக் கொடியின் தத்துவம் உழைப்பதும் உழைப்பின் பயனை மற்றவர்களுக்கு அளிப்பதும் தான் கடவுட் கொள்கை, கடவுளுக்கு விருப்பம். கடவுள் விரும்பும் பத்திமை என்பது உழைப்பும் உதவும் கரங்களுமேயாம். ஆதலால் பொங்கல் விழாவில் எருதுகளும் பாராட்டப் படுகின்றன.

உழைத்துப் பொருளீட்டினால் போதுமா? மகிழ்ச்சியாக வாழ, வாழ்க்கை. துணை நலம் தேவை. பழங்காலத்தில் தமிழ்நாட்டில் பெண் பார்க்கும் பழக்கம் இல்லை. பெண்ணடிமைத்தனம் இல்லை. மகளிர் ஆடவர்க்கு அளிக்கும் கொடைகளும் (வரதட்சணை) இருந்ததில்லை. மகளிர் தம்முடைய கணவரைத் தேர்ந்தெடுத்தனர். முதலில் வீரத்தினைக் கண்டுதான் மணக்க இசைந்தனர். காலம் மாற மாறப் பொருளாதாரத்திற்கு முதன்மை கொடுக்கும் சமூக அமைப்புத் தோன்றியது. பின், பொருள்களை மகட் கொடையாக மணமக்களுக்கு பரிசில் தரும் பழக்கம் அறிமுகம் ஆனவுடன் செல்வத்தின் மதிப்பு ஈட்டத்தின் அடிப்படையில் கணவனைத் தேர்ந்தெடுத்தனர். பின் காலம் மாற அயல் வழக்கு நுழைந்ததன் பயனாகப் பெண்ணடிமைத் தனம் தோன்றியவுடன் பெண்ணடிமைத் தனத்தின் விளைவாகத் தலைவன் - ஆண், பெண்ணிடம் (வரதட்சணை) கேட்கும் பழக்கம் தோன்றி இன்று நடைமுறையில் இருந்து வருகிறது. பழங்காலத்தில் மாட்டுப் பொங்கல் அன்று அல்லது அதற்கு மறுநாள் அன்று ஏறு தழுவுதல் நடைபெறும். காதலிலிருவர் கருத்தொருமித்துக் கூடி வாழ்தலே மகிழ்ச்சி. பானையில் பால் பொங்கினால் போதாது. உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும்.

வாழ்க்கையை மகிழ்ச்சியுடையதாக அமைத்துக் கொள்ள அறிவு தேவை. அறிவுக்குச் சிந்தனை தேவை. நமது சிந்தனை தாய்மொழியாகிய தமிழில்தான் வளரும். ஆதலால்,