பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/574

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

558

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தோன்றும். தீமை அறியாமையில் தோன்றும். நன்மை, தெள்ளிய அறிவில் தோன்றும். தீமை, திருவருட்சார்பில்லாதது. நன்மை திருவருட் சார்புடையது. தீமை எல்லாவற்றையும் அழிக்கும். நன்மை எல்லாவற்றையும் ஆக்கும். வாழ்க்கையில் சிறப்புடைய சான்றோர் காட்டுவது அறம். அந்த அறம் மனித உலகத்தை ஒருங்கிணைக்கும். அன்பிற் கலந்த ஒரு குடும்பமாக்கும், எல்லாருக்கும் எல்லாம் என்ற பேரறம் தழுவிய சமுதாய அமைப்பைக் காணும். போரற்ற சமாதான அமைதியில் அந்த உலகம் தங்கும். இதுவே மாண்புடையோர் அறம். இந்த அறத்தை இன்றே மேற்கொள்க. இப்பொழுதே மேற்கொள்க. இந்த அறநெறியில் நின்றோர் செத்தும் வாழும் கலையில் வல்லவராவர்.

ஆற்றும் துணையும் பொறுக்க!

வேற்றுமை இன்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றும் துணையும் பொறுக்க பொறாமையின்

தூற்றாதே தூர விடல்

என்பது நாலடியார்.

வாழ்க்கைக்கு நட்பு இன்றியமையாதது. ஒருவர் வாழ்க்கை மிகவும் சிறப்புடையதாக வெற்றி பொருந்தியதாக துணை செய்யும் உறுப்பு நட்பு உறுப்பேயாம். ஒருவர் “நான் காதலிக்காமல் கூட இருக்க முடியும். நட்பு இல்லாமல் இருக்க முடியாது” என்று சொல்லியதுமுண்டு. நட்பு, வாழ்க்கைக்கு அறிவினை அள்ளித் தரும்; துணையாக அமையும், துணிவு தரும்; புகழ் கொடுக்கும்; பாதுகாப்பாக அமையும். நட்பில் வேற்றுமை கூடாது. எந்தவிதமான வேற்றுமையுமின்றி, ஒன்றாகக் கலந்து பழகுதலே சிறந்த நட்பு. சிறந்த நண்பர்களுக்கிடையில் ஐயம் கிடையாது; இரகசியம் கிடையாது;