பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

43


உலகம். இதைத்தவிர நாட்டை வேறுபடுத்தும் வேறு எந்த தத்துவமும் நமது வாக்காளர்களை ஆட்கொள்ள இடம் கொடுக்கக் கூடாது. அப்படி வேறுபடுத்தும் தத்துவங்களை நாம் ஏற்றுக்கொள்ளுவது நமக்கும் நம்முடைய நாட்டுக்கும் நல்லதல்ல. இந்த நீதி வழிப்பட்ட கொள்கையைக் கொணர வாக்காளர்களின் ஆதரவும் முயற்சியும் வேண்டும். முன்னர் குறிப்பிட்டதுபோல இன்றைய சமுதாய அமைப்பில் சிலர் வாழ்வதும் பலர் வாடுவதும் என்ற நிலை நிலவிவருகிறது. இத்தகைய சமுதாய அமைப்பு கடவுள் தத்துவத்துக்கும், நீதிக்கும், நியாயத்திற்கும், தர்மத்திற்கும் முற்றிலும் முரண்பட்டது. ஒரு சிலரின் தேவையற்ற ஏகபோக வாழ்க்கைக்கும் கூட தர்மத்தின் வடிவங் கொடுக்கச் சிலர் முயற்சிக்கின்றனர். அம்முயற்சி பகலை இரவாக்கும் முயற்சி போன்றதே. பழங்கால சமுதாயத்தில், சிறந்து விளங்கிய சான்றோர்களும் சமயப் பெரியோர்களும், எல்லோரும் வாழ்கின்ற வாழ்க்கையே, அறநெறியின்பாற்பட்ட கொள்கையென வற்புறுத்தி வந்துள்ளனர்.

“எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லால்
வேறொன் றறியேன் பராபரமே”

என்று வலியுறுத்தினார் தாயுமானார். உண்மை இப்படி இருக்க இடைக்காலத்தில் முதலாளித்துவத்தின் இரும்புப் பிடியில் சமயம் சிக்கியது. அதனால் ஒருவனுடைய ஏகபோக சொத்துரிமை புண்ணியத்தின் பயன் என்ற தவறான கருத்துப் பரப்பப்பெற்றது. அதுபோலவே வறுமையில் கிடந்து வாடி உழலுவதற்குப் பாபம் காரணம் என்று காட்டிப் படுகுழியில் ஆழ்த்தினர், உழைப்பை உறிஞ்சி-செல்வத்தைச் சுரண்டி சமுதாயத்தை வாட்டிவதைப்பவர்கள்-மக்களின் மதப் பிடிப்பைத் தவறானவழியில் தங்களது சுயநலத்துக்குத் திருப்பிவிட்டுக் கொள்ளத் தவறவில்லை. புண்ணியத்திற்கும் செல்வத்திற்கும் என்ன உறவு? பாபத்திற்கும் வறுமைக்கும்