பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

47


தனால் விலைவாசிகளின் ஏற்றம் நமக்குத் தெரிகின்றது. திட்டமிட்ட காரியங்கள்மூலம் பொருள் வருவாய் உயர் வதனால் பண்டங்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று-இயற்கையும் கூட. சோஷலிஸ சமுதாய அமைப்பை நோக்கி நாம் ஒழுங்காக நடை பயில்வதன்மூலம் நம்முடைய வாங்கும் சக்தி அதிகரிக்கும். விலைவாசி ஏற்றம் மறைந்து விடும். அதுமட்டுமன்றி, உற்பத்தி செய்வோரும், வாங்குவோரும் தம்முடைய வாணிபத்தைக் கூட்டுறவு அமைப்புகளின் மூலமே நடத்திக் கொள்வார்களானால் விலைவாசி ஏற்றத்தைத் தவிர்க்க முடியும். ஆதலால், மக்களின் வாங்கும் சக்தியை அதிகப்படுத்த விரும்புகிறவர்களுக்கும், வாணிகத் துறையில் கூட்டுறவு முறையை வளர்க்க விரும்புகிறவர்களுக்குமே வாக்காளர்கள் வாக்குகளை வழங்க வேண்டும்.

மொழி வழித் தமிழர்களாகவும், நாட்டு வழி இந்தியர்களாகவும் வாழும் நமது எதிர்காலத்தைப்பற்றித் தெளிவான முடிவெடுக்க நம்முடைய நாட்டின் சென்றகால நடைமுறை அல்லது கருத்து இவற்றைத் தெளிவான அடிப்படையில் கணக்கிலெடுத்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம். சென்றகால நிகழ்ச்சிகளின் தெளிவில் உருவாகி வளரும் நிகழ்கால சிந்தனை வாக்காளர்களுக்கு யாரை ஆட்சியில் அமர்த்துவது என்பதை முடிவு செய்யத் துணை புரியும்.

நமது விடுதலைக்குத் தொடர்ந்து போராடி வெற்றி பெற்று, விடுதலையைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்டக் காலத்தில் மக்களிடத்தெழுந்த உள்ளக் கிளர்ச்சிகளைத் தெளிவுற உணர்ந்து, மக்களை அவ்வழி நடத்திச் செல்லும் ஆற்றல் பெற்ற சக்தி எது?

கட்டும் துணிக்காக மான்செஸ்டரை நம்பியிருந்த நாட்டை, மான்செஸ்டருக்குத் துணியனுப்பி அந்நாட்டுச் சந்தையிலும் வாகை சூடத்தக்க தொழிற்புரட்சியை உருவாக்கிய சக்தி எது?