பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செல்வத்தின் பயன்

91


மேடு பள்ளங்கள் இருக்காது. மனிதர்களுக்கிடையில் பகையும் வளர்ந்திருக்காது. பகையின்மையால் களவு - காவற் பணிகள் தலையெடுத்திருக்கா, இன்றோ, செல்வம் செல்வத்தைச் சம்பாதிக்கப் பயன்படுகிறது. இஃது ஒரு கொடுமை! செல்வம் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தப் பயன்படுத்தப் பெறுகிறது. ஏன்? நாடாளும் அரசிலிருந்து ஆண்டவன் சந்நிதானம் வரை இந்தப் பண்பிழந்த செல்வத்திற்கு அமோக மரியாதை! இது வையகத்தின் இயல்பான நடைமுறையன்று. நெறிமுறை பிறழ்ந்த நடை முறையே!

இதனைச் சங்கத்துச் சான்றோர் நக்கீரனார் நயம்பட எடுத்துக் காட்டுகின்றார். உலகம் முழுவதும் ஆண்டா லென்ன? அவனுக்கும் இயற்கை விதித்த உணவு நாழி தானே! மானம் மறைக்கும் உடையும் இரண்டுதானே! அப்படியிருக்க ஏன் துய்ப்பில் அதிக ஆசை அளவுக்கு விஞ்சிய துய்ப்பு இன்பத்தைத் தருவதற்குப் பதில் கழிபிணியைத் தந்து இயற்கையமைத்த துய்ப்பினையும் தப்பச் செய்யும். இயற்கையின் தேவையான துய்ப்பின்றிப் பலர் துயருறத் தாமே துய்க்க நினைத்தல் இயற்கைக்கு இசைந்த வாழ்க்கையன்று. இந்த முறையில் ஒன்றைத் துய்க்க நினைத்தாலும் அவ்வழி பல தப்பும். இதுவே நக்கீரனார் தந்த நல்லுரை:

தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான்
கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை யிரண்டே
பிறவு மெல்லாம் ஓரொக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புத பலவே.

-புறநானூறு