பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முற்றாகக் காரணங்களாகா! வாழ்கின்றவனுடைய மன உறுதிதான் காரணமாக முடியும்.

புதை மணலில், சகதியில் அகப்பட்டுக் கொண்ட உரம் மிக்க காளைகள் படுக்கா! தலையைக் குனிந்து மூச்சை அடக்கி, காலை மடக்கி எழும். அந்த முயற்சியைப் பார்த்தாவது மனிதன் தன் முயற்சியைப் பற்றிக் கற்றுக் கொள்ளவேண்டும்.

ஏதாவதொன்றைச் செய்து கொண்டிருப்பவர்கள் எல்லாரும் முயற்சி உடையார் என்று ஏற்றுக் கொள்ளப் பெற மாட்டார்கள். வேலைகள் குறித்த வேளைகளில் குறித்த பயன் கூடும் வண்ணம் செய்து முடிக்கப் பெறுதல் வேண்டும். இன்று, கடமைகளைக் காலத்தில் செய்பவர்களைக் காண்பதரிது. அது மட்டுமா? எந்த ஒரு பணியையும் கடமையாகச் செய்து வெற்றி காணாமல் இடையறவுபட்டு அல்லலுறுவோர் பலர். ஒரு சிறு இடர்ப்பாட்டைக்கூடத் தாங்க முடியாமல் துன்புறுவோர் எப்படி வாழ்க்கையில் வெற்றிகளைக் குவிக்க முடியும்?

அறிவியல் முறைப்படி இடர்ப்பாடுகளும் துன்பங்களும், வாழும் உயிர்ப்புள்ள மனிதனைத் தூண்டித் தொழிற்படுத்தி வளர்க்கும்.

சோழன் கரிகாலன் வடபுலம் நோக்கிப் படையெடுத்துச் செல்கிறான். வடபுலத்து நிலங்கள் எல்லாம் அவன் வெற்றியை ஏற்றுக் கொண்டன. தமிழ்ப் பேரரசு கால்கொள்கிறது. இந்தியாவுக்கு அப்பாலும் செல்ல ஆவல்! ஊக்கம்! ஆனால், இமயமலை குறுக்கே நிற்கிறது! இமயமலை உச்சியில் தமிழ்ப்பேரரசின் சின்னம் பொறிக்கப் பெறுகின்றது!

கரிகாலன் எதிர்பாராது சோழ அரசுக் கட்டிலில் ஏறியவன்! ஆயினும், சோழன் கரிகாலன் வீரத்தால் தமிழரசு பேரரசு ஆயிற்று; இமயத்தின் உச்சிவரை பரவிற்று. எழுச்சித்