பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வடிவமைப்பில் “தனி மனிதரே” ஆட்சி செய்யும் இயல்பு இன்றைய மக்களாட்சி முறையில் அமைந்திருக்கிறது. ஆட்சி முறையில் தவறுகள் பெருகுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதே தவிர, குறைய வழி காணப் பெறவில்லை.

ஆட்சியைவிட, கட்சிகள் பெரிதாகி விட்டன. இன்று நாட்டில் வளர்க்கப் பெறுவது கட்சிப் பற்றே தவிர, நாட்டுப் பற்றல்ல! இவ்வாறு முறை பிறழ்ந்தபோதெல்லாம் அரசு நெறிமுறை திறம்பியுள்ளது. அரசு கெட்டுப்போய் வலிமை குன்றிப் பழிப்புக்கு ஆளாகி வரலாற்றுக்கு அடிமையாகி அழிந்திருக்கிறது. அரசியல் மரபில் வந்த அருளாளர் இளங்கோவடிகள், இந்நிலை கண்டு இரங்குகின்றார்.

ஆட்சி இயற்றும் அரசியல் தலைவன், அரசியல் முறை தெரிந்த, நல்லாட்சி தவிர வேறெதையும் நாடாத நல்லோருடன் கலந்து செய்யாததால் எங்கும் முறை பிறழ்ச்சி!

உழைப்பவர் வருந்துவர்; உறிஞ்சும் உலுத்தர்கள் வாழ்வர்;உழைப்புக்கு உரிய ஊதியம் கிடைக்காததால் உழைப்பாளர் வருந்துவர்; உற்பத்தி குறையும்; வறுமை வளரும் ஆறலை கள்வர் தோன்றுவர்; களவும் கலகமும் வளர்ந்து அமைதிச் சூழ்நிலையைக் கெடுக்கும்; அரசியல் என்பது இல்லாததுபோல நாடு காட்சி தரும்.

அரசியல் முறை பிறழ்ந்த நாட்டில் அவலம் பெருகும்; அந்த நாடு, பாலை நிலம் போல விளங்கும்; நிலத்தின் வகையில் பாலை நிலம் கிடையாது; குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலம் நான்கு வகையினதே.

இயற்கையின் தலைமைக் கோள் ஞாயிறு தம் நிலை கெடுதலால், வளம் கொழிக்கும் குறிஞ்சிநிலம் வளம் குன்றுகிறது. முல்லை நிலம் முழுதும் கெடுகிறது. வளம் மிக்க தம் இயல்பைக் குறிஞ்சியும் முல்லையும் இழந்து விடுகின்றன. காதலுக்கும் களிப்புக்கும் உரியதாயிருந்த இந்நிலங்கள் மக்களுக்குத் துன்பம் தரும் பாலை நிலமாகி விடுகின்றன.