பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

127


மற்ற உலகியல் பேறுகள் அனைத்தும் மற்றவர்களிடத்தில் அழுக்காற்றைத் தோற்றுவிப்பன போட்டி உணர்வைத் தருவன. அதனால், புகழ்பெறுதலும் பாதுகாத்தலும் அரிது. அதுமட்டுமன்று, ஒருவர் புகழ், மற்றவர்களிடத்தில் அழுக்காற்றை உண்டாக்கும்.

அழுக்காறுடையவர்கள், புகழுடையோரை இகழ்வர், இகழ்ச்சியைத் தாங்கமுடியாமல் பொறுமையிழந்து பொருத வேண்டிவரும். அவ்வழி பகையும் போரும் மூளும்.

புகழ் கருதிச் செய்யும் எவையும் அறமாகா. வணிக நோக்கோடு செய்யப்பெறும் எச்செயலும் அறமாகாது. ஏன்? இலாபம் என்ற குறிக்கோளும் வெறியூட்டும் தன்மையது. இலாபம் மேலும் மேலும் கூட வேண்டும் என்றே இலாப நோக்குடையவர் விரும்புவர். இத்தகு இலாபவெறியரின் துண்டுதலால்தானே, உணவுப் பொருள்களில் கூட கலப்படம் செய்கின்றனர்; கைநிறைய ஊதியம் பெற்றாலும் கையூட்டின் மீது நாட்டம் கொண்டுள்ளனர். ஆதலால் இலாப நோக்கும் மனத்துய்மைக்குத் துணை செய்யாது.

ஆதலால், தொண்டு மனப்பான்மையுடன் செய்யப் பெறும் அறச் செயல்கள், மனத்துாய்மைக்கு வாயிலாக அமையும். இத்தகு அறத்தை - நற்செயல்களை, ஒவ்வொரு வினாடியும் சிந்தனையால், செயலால் உயிர்க் குலத்தினிடத்தில் அன்பு காட்டி, அந்த உயிரினம் வாழ்தலுக்கு உரியவாறு செய்து கொண்டிருக்க வேண்டும்.

அறம் செய்தலுக்குரிய காலம் என்று ஒன்று இல்லை. நாள்தோறும் வீடுகள் கூட்டிச் சுத்தம் செய்யப் பெறுதல் வேண்டும். அங்ஙனம் கூட்டப் பெறாத வீட்டில் கூட்டித் தூய்மை செய்ய இயலாவண்ணம் சில நாட்களில் அழுக்குகள் வந்தடையும். அவ்வழி, நச்சுயிர்களும் வந்து வாழத் தொடங்கும். அதுபோல அன்றாடம் மனத்துாய்மை செய்து கொள்ளுதல் வேண்டும்.