பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

139


and constancy” அவ்வளவே. “அவரவர் வினை வழி அவரவர் வந்தனர்” என்பது ஞான அனுபூதி வாக்கு.

வாழ்க்கை என்ற களத்தில் குதிக்கும் பொழுதே சென்ற கால வாழ்க்கையின் பயன் - சுமை இருக்கத்தான் செய்கிறது. அதே போழ்து சிந்திக்கும் திறனும் அறிவும் உயிர்க்கு இயல்பாக அமைந்திருக்கிறது. இப் புத்தியால் சாக்கைத் தூக்கினாலும், தண்ணீரில் நனைத்துத் தூக்காமல் எளிதில் துாக்குவது போல் உயிர்கள் பயனைத் துய்க்கலாம்.

ஆதலால் ஊழால் அதனுடைய விளைவால் எதிர் விளைவால் பாதிப்புக்கு ஆளாகாமல் தற்காத்துக் கொள்ள முடியும். இதுதான் தமிழ் நெறி; வாழ்வியல் நெறியும்கூட! இந்த ஊழை இலக்கியங்கள் சமய நூல்கள் எப்படி விளக்குகின்றன?

தமிழிலக்கியங்களில் தொன்மையானது புறநானூறு. புறநானூற்றிலேயே ஊழியற் கொள்கை வலியுறுத்தப் படுகிறது. கணியன் பூங்குன்றன் என்ற பெரும் புலவர்,


"யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றலு மிலமே மின்னொடு
வானம் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”

(புறம். 192)