பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அணிந்துரை

முனைவர் ஒளவை நடராசன்

தமிழ்ப் பல்கலைக்கழக முன்னைத் துணைவேந்தர்

தமிழ்நெறிக் காவலராகவும், துறவு பூண்ட அடிகளாகவும் உலகெங்கும் உரையுலா நடத்தித் தமிழின மக்களின் உள்ளம் கவர்ந்த ஒருமாமணியாய்த் திகழ்ந்தவர் குன்றக்குடி அடிகளாராவார். ஞானியாரடிகள், மறைமலையடிகள் ஆகிய இருவரும் கோட்பாட்டால் இணைந்ததொரு கோலத் திருமேனியோடு குன்றக்குடி அடிகளார் தமிழினம், தமிழ்ச் சமயம், தமிழிலக்கியம், நடைமுறை அரசியல், பொருளியல், வாழ்வியல் கலந்த அனைத்துத் துறைகளிலும் வழங்கிய கருத்துரைகள். தமிழ் மரபுக்கு உரம் சேர்க்கும் தனிப்பெரும் களஞ்சியங்களாகும்.

குன்றக்குடி ஆதீனப் பொறுப்பேற்றதும், தமிழ்மேடைகளில் வந்துநின்ற அடிகள் ஆற்றிய உரைகள், புதுமையாகவும், அனைத்துச் சமயத்தார்க்கும் ஆர்வமூட்டும் கிளர்ச்சியுரை களாகவும் அமைந்தன. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகில், அடிகளார் பங்குபெறாக் கல்லூரிகளோ, திருக்கோவில் அரங்குகளோ, பொதுமேடைகளோ அமைந்ததே இல்லை. அரசியல்வாணர்க்கு நடுவிலும் அறப்பெருஞ்சுடராகவும் திகழ்ந்து, மேலவை உறுப்பினராகவும் அடிகளார், அரசியலுக்கும் அணிசேர்த்தார்.

அருள்நெறித் திருக்கூட்டங்கள் நாடெங்கும் மலர்ந்தன. திருக்குறள் நெறிபரப்பும் ஆர்வத்தை எங்கும் பரப்பினார். கல்லூரி மாணவராக இருந்த எம்மனோரை ஒருங்கே திரட்டிப் பட்டிமன்றம், சிந்தனைமேடை அறிவரங்கம் எனப் புதுப்புனைவுகளைக் காட்டி, இலக்கிய மேடைகளுக்கு எழிலார்ந்த வளமும் வடிவும் ஊட்டினார். யான் மாணவனாக இருந்தபோது, பச்சையப்பர் கல்லூரித் தமிழ்ப்பேரவையில், ‘இனமுழக்கம்’ எனும் தலைப்பில் அடிகளார் ஆற்றிய உரை. இன்றும் நினைவில் ஒலித்தபடி உள்ளது. இடிமுழக்கத்திற்குப்பின் பெருமழை பெய்யும்; இனமுழக்கத்தால். தமிழ்உணர்வு பொங்கித் ததும்பும் என்று தமது உரையைத் தொடங்கிப் பல்லாயிரக் கணக்கான மாணவர்க்கிடையில் முழங்கினார். பறம்புமலைப் பாரிவிழாவில்