பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

ஆரத் தழுவி, “மூத்த ஒளவைக்கு முடிசூட்டினேன் அன்று; இளைய ஒளவைக்கு முடிசூட்டி மகிழ்கிறேன் இன்று” எனக் கண்களில் நீர்துளிர்க்கச் சொல்லித் தந்தையினும் களிகூரத் தழுவினார். நெஞ்சு நெகிழும் உறவு நிலைகளை வளர்த்த பல நினைவுகள் என் நெஞ்சில் அலைகளாகப் புரள்கின்றன. தமிழ்ப்பல்கலைக் கழகத்துக்கு வந்து, என்னோடு உடன் உறைந்ததும், பல்கலைக்கழக இல்லுறைவோர் விரும்பிக்கேட்ட நிலையில், பல்கலை விநாயகர் திருக்கோவிலை என் துணைவியார் நிறுவியபோது, திருக்கோவில் அமைப்பின் தொடக்கம் முதல் குடமுழுக்கு நிறைவு வரையில் அடிகளார், “எங்கள் வீட்டுத் திருமகள் கட்டிய பல்கலை விநாயகர்” எனத் தஞ்சைக்கு வரும்போதெல்லாம் வணங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

‘சங்கத் தமிழர் வாழ்வியல்’ முதலாகக் ‘கம்பன் கண்ட பொதுமைச் சமுதாயம்’ ஈறாக, இலக்கிய நலம்பொலியும் எழிலார்ந்த பதினேழு கட்டுரைகளின் களஞ்சியமாக அடிகளார் தொகுதி வரிசையில் இஃது ஐந்தாம் மடலாக மலர்கிறது. சங்கத் தமிழ் இலக்கியங்களின் சால்பினைத் தம் நுண்மாண் நுழைபுலனால் விரித்து விளக்கும் கட்டுரைகளாகப் பலவும் சிலப்பதிகாரச் செந்நெறி, ஊழ்வினை பற்றிய விளக்கம், கம்பர் காட்டும் அரசியல் பாங்கு நாட்டுநலம் பற்றிய கனவுகள் இவற்றைக் கொண்ட அருங்கலைப் பேழையாக இத்தொகுதி அமைந்துள்ளது. உரையாற்றும்போது தொடக்கம், பொருண்மை விளக்கம், தடைவிடை ஆய்வு, நலம் காண்டல், மீள்நோக்குச் செய்தல், முடிவு தெளிதல் எனத் தம் எழுத்துரைகளையும் பேச்சுரைகளையும் வரையறை செய்து வழங்கும் திறத்தை அடிகளாரின் தனிப்பாங்கு எனக் குறிப்பிடலாம். தெளிந்த இவ்வரிசைமுறை அனைத்துக் கட்டுரைகளிலும் அழகுபட அமைந்திருப்பதை ஆய்வாளர் பாராட்டவும் இளைஞர் அம்மரபைத் தொடரவும் கட்டுரைகள் வழிகோலுகின்றன.

புநநானூற்றுப்  பாடல்களில் பொதிந்த பொருண்மை நலங்களை நடைமுறை வாழ்வுக்குப் பொருந்துமாறு விளக்கம் செய்யும் புலமைப் பெருமிதத்தை நூலின் பல பகுதிகளில் காணலாம்.

“ஒருநாடு இன்புற்று விளங்க, அந்நாட்டின் அகத்திணை வாழ்க்கைக்கும் புறத்திணை வாழ்க்கைக்கும் உரிமை பூண்ட