பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

ஆடவர் நல்லவராய் அமைதல் வேண்டும். நல்லவர் என்பது. ஓர் உயர்ந்த குறிப்புச்சொல். அறிவு, ஆற்றல், சீலம், பண்பாடு ஆகிய அனைத்தும் நிறைந்தவரையே நல்லவர் என்று கூறுவது சங்க இலக்கிய மரபு.”

“நாடு, நாட்டு நலன்கள் அனைத்தும் அமைந்ததாக இருந்தால் என்ன? இல்லாது போனால் என்ன? மேடாக இருந்தால் என்ன? இவற்றாலெல்லாம் நாடு வளமாக அமைந்து விடுவதில்லை. நாட்டின் குறைகளை நீக்கி, நாள்தோறும் பாதுகாக்கும் திறமுடைய ஆடவர்கள் இருந்தால்தான் அந்த நாடு வளமுடையதாக இருக்கும்.”

“அங்ஙனம் நாட்டில் நல்லவர்கள் வாழாது போனால், நாட்டின் இயற்கையையும் வாழ்வோர் அழித்துவிடுவர். நாடு, இயற்கையில் நல்வளங்கள் அமைந்து விளங்காது போனாலும், நல்லோர் தமது அறிவறிந்த ஆள்வினையின் மூலம் அந்நிலத்தின் குறைகள் அனைத்தையும் நீக்கி, நலன்கள் நிறைந்ததாக்கி விடுவர். இந்த அரிய கருத்தினை ஒளவையார்,

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!

(புறம் - 157)

என்று கூறி விளக்குகிறார். இன்றும் இப்பாடல், நம்நாட்டு மக்களுக்குத் தக்க அறைகூவலாக விளங்குகிறது. கடல் கொந்தளிப்பினால், பாழ்; வெள்ளத்தினால், பாழ்; வறட்சியினால், பாழ் என்றெல்லாம் அவலப்படுகிறோம். ஏன்? நம்முடைய நாட்டை உயிரினும் மேலாக மதித்து. அதனை நாடோறும் வளங்குன்றா நிலையில் பேணிப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டால், இந்நாட்டினும் வளங்கொழிக்கும் நாடு வேறெது?”

“ஆதலால், ஒருநாட்டின் வளத்திற்கும் சிறப்பிற்கும் அந்நாட்டின் ஆடவரே பொறுப்பு என்பது சங்கத் தமிழர் வாழ்வியலின் முடிவு.”

இவ்வாறு அடிகளார் விளக்கிச் சங்ககாலத் தமிழர் வாழ்வியல் கூறுகளாகிய ஒழுக்கநெறி, கலை;நாகரிகம், பண்பாடு, மெய்ந்நூற்